முன்னும் பின்னும் போலீஸ் வாகனங்கள்.. கடலூரில் கான்வாய் முறையில் இயக்கப்பட்ட அரசு பேருந்துகள்
கடலூர் மாவட்டத்தில் பாமக முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதால் பேருந்துகளுக்கு முன்னும் பின்னும் போலீஸ் பாதுகாப்பு வாகனங்கள் செல்கின்றன.
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பா.ம.க முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பேருந்துகளுக்கு முன்னும் பின்னும் போலீஸ் பாதுகாப்பு வாகனங்கள் செல்கின்றன. அரசு பேருந்துகள் 100 சதவீதம் முழுமையாக இயக்கப்படுகின்றன.
கடலூர் மாவட்டத்தில் உள்ள என்.எல்.சி நிறுவனம் விரிவாக்க பணிக்காக நிலங்கள் கையகப்படுத்த அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
என்.எல்.சி., கடலூர் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளை ஊருக்குள் நுழைய விடாமல் போராட்டங்கள் நடத்தினர். அதேபோல், ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஒரு கோடி ரூபாய் வேண்டும்.

எல்லை வரையறை செய்யும் பணி
வீட்டிற்கு ஒருவருக்கு என்.எல்.சி.யில் நிரந்தர வேலை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, ஆணைவாரி, எரும்பூர், கத்தாழை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், என்.எல்.சி. நிறுவனம் நிலங்களை கையகப்படுத்தும் பணியை நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் கட்டமாக எல்லை வரையறை செய்யும் பணிகளை என்எல்சி தொடங்கியது.

விரிவாக்க பணியை நிறுத்த கோரி
என்எல்சியின் இந்த நடவடிக்கையை கண்டித்து நேற்று முன்தினம் பாமக, கிராம மக்கள் தரப்பில் போராட்டங்கள் நடைபெற்றது. இதற்கிடையே, நேற்று சேத்தியாத்தோப்பு அருகே என்எல்சி சுரங்க விரிவாக்க பணியை நிறுத்த கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. உள்பட 77 பேர் கைது செய்யப்பட்டனர். அடுத்தடுத்த இந்த விவகாரங்களால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

கடைகள் திறந்தே இருக்கின்றன
இதையடுத்து என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து இன்று கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் பாமக தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதனால், கடலூர் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடைகளும் பெரும்பாலும் திறந்தே இருக்கின்றன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக எதுவும் பாதிக்கவில்லை.

முன்னும் பின்னும் போலீஸ் வாகனங்கள்
அரசு பேருந்துகள் 100 சதவீதம் முழுமையாக இயக்கப்படுகின்றன. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 பேருந்துகள் மொத்தமாக இயக்கப்படுகிறது. பேருந்துகளுக்கு முன்னும் பின்னும் போலீஸ் வாகனங்கள் செல்கின்றன. விஐபி கான்வாய் வாகனங்கள் போல அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தனியார் பேருந்துகள் குறைந்த அளவிலே இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் இருந்து புதுவை செல்லும் அரசு பேருந்துகள் வழக்கம் போல் சென்று வருகின்றன. எனினும், புதுவையில் இருந்து வரும் புதுச்சேரி பேருந்துகள் கடலூர் மாவட்ட எல்லையில் பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றன.












Click it and Unblock the Notifications