2024 நாடாளுமன்றத் தேர்தல்! கடலூரில் களமிறங்கும் திட்டத்தில் பாமக! அமைச்சர் மகனுடன் நேருக்கு நேர்?
கடலூர்: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கடலூர் மக்களவை தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி களமிறங்கும் திட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கூட்டணியில் போட்டியிட்டாலும் சரி, தனித்து களம் கண்டாலும் சரி கடலூரில் பாமக களமிறங்குவது உறுதி எனக் கூறப்படுகிறது.
இதனிடையே திமுக தரப்பில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன் களமிறங்கலாம் எனக் கூறப்படும் நிலையில் போட்டி வலுவாக இருக்கும் எனத் தெரிகிறது. இதனால் இப்போதே கடலூர் மக்களவைத் தொகுதி கவனம் ஈர்க்கத் தொடங்கியுள்ளது.

கடலூர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ரமேஷுக்கு மீண்டும் திமுகவில் சீட் கிடைக்க வாய்ப்பே இல்லை. காரணம் முந்திரி தொழிற்சாலை ஊழியர் கொலை வழக்கில் அவர் சிக்கியதோடு கட்சிக்கும் தர்ம சங்கடமான சூழலை ஏற்படுத்தியிருந்தார். இதனால் இப்போது பெரியளவில் ஆக்டிவாக இல்லாமல் சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டார் திமுக எம்.பி. ரமேஷ்.
இந்தச் சூழலில் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளரும், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மகனுமான கதிரவன் போட்டியிடக் கூடும் என கடலூர் மாவட்ட திமுகவினரால் பேசப்படுகிறது. என்.எல்.சி. நிலம் கையகப்படுத்துதல் விவகாரத்தில் தொடர்ந்து போராடி வரும் அன்புமணி ராமதாஸ் கடலூர் மாவட்ட மக்கள் மத்தியில் வெகுவாக கவனம் ஈர்த்திருக்கிறார்.

இதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாமக சார்பில் ஒருவரை வேட்பாளராக களமிறக்கும் முடிவிலும் அவர் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் நாடாளுமன்றத் தேர்தலின் போது கடலூரில் அனல் பறக்கும் அரசியல் காட்சிகள் அரங்கேறும் எனத் தெரிகிறது.
அன்புமணி ராமதாஸ் மீண்டும் தருமபுரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டால் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லையாம். இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், தருமபுரி மாவட்டத்துக்கும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தான் பொறுப்பு அமைச்சர். இதனால் கடலூர், தருமபுரி ஆகிய 2 மாவட்டங்களிலும் பாமகவை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications