சொந்த காசில் வீடு கட்டிக்கொடுத்து, சீர்வரிசை சுமந்த விருத்தாச்சலம் போலீஸ்.. நெகிழ்ந்த ஏழை குடும்பம்
கடலூர்: கடவுள் மனித ரூபத்தில் வருவார் என்று சொல்வார்கள்.. இங்கு ஏழை குடும்பத்திற்கு போலீஸாரே கடவுள் போல் வரம் கொடுத்துள்ளனர். ஏழை குடும்பத்திற்கு போலீசார் தங்கள் சொந்த காசில் வீடு கட்டி கொடுத்துள்ளனர். கணவனை இழந்து குழந்தைகளை வளர்க்க முடியாமல் ஏழ்மையில் தவித்த பெண்ணுக்கு விருத்தாச்சலம் டிஎஸ்பி ஆரோக்கியராஜ் தலைமையில் போலீசார் உதவி உள்ளனர்.
ஏழைகள் அப்படி ஏழைகளாக இருக்க இரண்டு காரணம் தான். ஒன்று அவர்கள் விதி என்று நினைத்து அப்படியே வாழ்வை தொடர்வது. இன்னொன்று பணம் காசு உள்ளவர் அவர்களை முன்னேற்றிவிட விரும்பாததது. சிலர் என்னதான் முயற்சி செய்தாலும் முன்னேற முடியாத அளவிற்கு சிக்கலில் சிக்கி இருப்பார்கள்.. அவர்களுக்கு யாராவது உதவினால் தான் முன்னேற முடியும்.. அப்படியான முன்னேற்றத்தை யார் செய்தாலும் அவர்கள் கடவுள் தான். அந்த வகையில் போலீசார் இணைந்து ஒரு ஏழை குடும்பத்திற்கு உதவி உள்ளனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மணலூர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40) கட்டிட தொழிலாளியான இவர் கடந்த மார்ச் மாதம் நடந்த சாலை விபத்தில் இறந்து போனார். இவருடைய மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு சந்தியா, செவ்வந்தி என்ற 2 மகள்களும், சரண் குமார், நிதீஷ், நிகாஷ் ஆகிய 3 மகன்களும் உள்ளனர். சக்திவேல் இறந்துபோனதால் முத்துலட்சுமி 5 குழந்தைகளுடன் ஆதரவின்றி தவித்து வந்தார்.
இதனிடையே ஏழ்மையில் உள்ள தனது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கக்கோரி விருத்தாசலம் டிஎஸ்பி ஆரோக்கியராஜை சந்தித்து வேண்டுகோள் வைத்தார். அப்போது முத்துலட்சுமி தனது 5 குழந்தைகளுடன், பாழடைந்த குடிசை வீட்டில் வசித்து வந்தார்.. இதையறிந்து வருத்தப்பட்ட விருத்தாசலம் துணை காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ், முத்துலட்சுமியின் 5 குழந்தைகளும் படிப்பதற்கு தேவையான உதவிகளை தன்னுடைய சொந்த செலவில் செய்வதுடன், அந்த குடும்பத்திற்கு கான்கிரீட் வீடு கட்டி கொடுக்கலாம் என்று முடிவு செய்தார்..
இதற்காக உதவும் காவல் இதயங்கள் என்ற வாட்ஸ் அப் குரூப் மூலமாக, பலரை ஒருங்கிணைத்து வீடு கட்டுவதற்கு தேவையான சிமெண்டு, ஜல்லி, மணல் போன்ற பொருட்களை வாங்கினார். பின்னர் முத்துலட்சுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சத்தில் புதிய வீட்டை கட்டி கொடுத்தார். மேலும் அந்த வீட்டிற்கு கருணை இல்லம் என பெயர் வைக்கப்பட்டது. கருணை இல்லம் திறப்பு விழா புதன்கிழமை நடந்தது. போலீசார், சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக வந்தனர்.
இந்தத விழாவில் இன்ஸ்பெக்டர்கள் விருத்தாசலம் அய்யனார், கம்மாபுரம் மாணிக்கராஜா, மங்கலம்பேட்டை தேவி, கருவேப்பிலங்குறிச்சி சிவராமன், உ பெண்ணாடம் குமார், மங்கலம்பேட்டை சந்திரசேகர், அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் விருத்தாசலம் ரேவதி, சப்-ராமலிங்கம், பெண்ணாடம் பிரகஸ்பதி, ஆலடி பரந்தாமன், விருத்தாசலம் ரவிக்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் விருத்தாசலம் இளங்கோவன், காந்தி, ஜெயக்குமார் என போலீசார் மொத்தமாக கலந்து கொண்டனர்..
இந்த விழாவில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் கலந்து கொண்டு புதிய வீட்டை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். அந்த வீட்டிற்கு உரிய சாவியை முத்துலட்சுமி குடும்பத்தினரிடமும் எஸ்பி ராஜாராம் வழங்கினார்.
மேலும் ஆதரவற்ற குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுப்பதற்கு பெரும் பங்கு வகித்த விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த அனைவரையும் எஸ்பி ராஜாராம் வெகுவாக பாராட்டினார். கணவனை இழந்து ஆதரவின்றி தவித்த குடும்பத்துக்கு போலீசார் புதிய வீடு கட்டி கொடுத்த சம்பவம் விருத்தாச்சலம் பகுதியில்ல நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..












Click it and Unblock the Notifications