எங்க பூர்வோத்திரமும் பூர்வ நிலமும் இதுதான்... உங்களுக்கு? அன்புமணிக்கு வேல்முருகன் சகோதரர் பதிலடி
பண்ருட்டி: தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மீது தேர்தல் பிரசாரத்தின் போது பாமக இளைஞரணி தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இந்த விமர்சனங்களுக்கு இப்போது வேல்முருகனின் சகோதரர் திருமால்வளவன் பதிலடி கொடுத்து வெளியிட்ட வீடியோ வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடம்பெற்றுள்ளது. பண்ருட்டி தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் போட்டியிட்டுள்ளார்.
வேல்முருகனுக்கு எதிராக பண்ருட்டி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தார். அப்போது, தமிழகத்தின் 234 தொகுதிகளிலேயே மிக மோசமானவர் பண்ருட்டி வேல்முருகன் என்பது உள்ளிட்ட மிக மிக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் அன்புமணி. இதற்கு அப்போதே வேல்முருகனும் பதிலடி கொடுத்திருந்தார்.

வைரலான வீடியோ
இந்த நிலையில் வேல்முருகனின் சகோதரர் திருமால்வளவன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பல்லாயிரக்கணக்கானோர் ஷேர் செய்து வருகின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வீடியோ பதிவில் ஆதரவு, எதிர்ப்பு என கருத்துகளை பதிவிட்டும் வருகின்றனர்.

திருபுவனம் டூ வட தமிழகம்
இந்த வீடியோவில், சிவகங்கை அருகே உள்ள திருப்புவனம் என்கிற இடம்தான் தங்களது பூர்வீகம்; பாண்டிய மன்னர்கள் வழிவந்தவர்கள்; அங்கிருந்து சூழ்நிலைகளால் இடம்பெயர்ந்த தென்னவராயர் வம்சாவளியை சேர்ந்தவர்கள்தான் வேல்முருகனின் மூதாதையர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

ஆவணங்களில் இருக்கிறதே
மேலும் வேல்முருகனுக்கு இரண்டரை ஏக்கர் நிலம்தான் பூர்வீக நிலம் என அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார். இதற்கு பதில் தரும் வகையில் சர்வே எண் உள்ளிட்டவைகளையும் அறிவித்து தங்களது குடும்பத்துக்கு பாரம்பரியமாக எத்தனை ஏக்கர் நிலம் இருந்தது என்பதை அரசு ஆவணங்களிலேயே தெரிந்து கொள்ளலாம் எனவும் திருமால்வளவன் கூறியுள்ளார்.

வேல்முருகனின் அரசியல் பயணம்
தம்மால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டவர் வேல்முருகன் என்ற கருத்துக்கும் மறுப்பு தெரிவித்திருக்கிறார் திருமால்வளவன். தமிழ்நாடு விடுதலைப் படை என்ற தமிழரசின் இயக்கத்துக்கு ஆதரவாக இருந்தது; அது அரசியல் இயக்கமாக மாறிய போது அதில் வேல்முருகன் இடம்பெற்றிருந்தது உள்ளிட்டவையையும் திருமால்வளவன் பட்டியலிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications