எருமை மாட்டிற்கு ஓனர் யார்? உரிமை கொண்டாடிய இருவர்.. போலீசார் செய்த ஹைலைட் சம்பவம்
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் ஒரு எருமை மாட்டிற்கு இரண்டு பேர் உரிமை கொண்டாடியுள்ளனர். இந்த விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை செல்லவே, இதற்கு போலீசார் வித்தியாசமான முறையில் கையாண்டு இந்த பிரச்சினையை தீர்த்து வைத்துள்ளனர். சுவாரசியமான முறையில் போலீசார் இந்த பிரச்சினைக்கு எப்படி தீர்வு கண்டார்கள் என்பதை பார்க்கலாம்.
காட்டு மன்னார் கோவில் அருகே ஒரே எருமை மாட்டிற்கு இரண்டு பேர் உரிமை கொண்டாடியதோடு, பஞ்சாயத்தை போலீஸ் ஸ்டேஷன் வரை கொண்டு சென்றுள்ளனர். இது என்னடா வம்பா போச்சே..என நமட்டு சிரிப்புடன் போலீசார் இந்த பிரச்சினைக்கு நூதன முறையில் தீர்த்து வைத்து இருக்கிறார்கள். அது எப்படி என்பது குறித்த செய்தியை காணலாம்.

கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் அருகே உள்ள கீழபழஞ்சநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். கூலித்தொழிலாளியான பழனிவேல் எருமை மாடு ஒன்றையும் வளர்த்து வந்தார். இந்த எருமை மாடு தங்களுடையது என்று சிதம்பரம் அருகே உள்ள வீரசோழன் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன்- தீபா தம்பதி உரிமை கொண்டாடினார். இது தொடர்பாக போலீசிடம் புகார் அளித்தனர்.
அந்த புகாரில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தாங்கள் வளர்த்து வந்த 6 எருமை மாடுகள் காணாமல் போனதாகவும் அதில் 5 மாடுகள் பழஞ்சநல்லூர் கிராமத்தில் இருப்பதாகவும் பேஸ்புக்கில் வெளிவந்த பதிவை பார்த்து மீட்டோம். மீதம் உள்ள ஒரு மாட்டையும் தொடர்ந்து தேடி வந்த போது, கீழபழஞ்சநல்லூர் கிராமத்தில் வசித்து வந்த பழனிவேல் வீட்டில் இருப்பதாகவும் அதை மீட்டு தருமாறும் கூறியிருந்தனர்.
இதையடுத்து பழனிவேலை அழைத்து விசாரித்த போலீசார், புகார் குறித்து கேட்டனர். அப்போது திருமூலஸ்தானம் பகுதியில் இருந்து இந்த மாட்டை வாங்கியதாகவும் அவர் கூறினார். பிரச்சினை ஓயாததால் மாட்டை பிடித்து காவல் நிலைய வளாகத்தில் கட்டி வைத்தனர். மாட்டின் உரிமையாளர் யார் என்பதை கண்டறிவதில் பெரும் குழப்பம் நீடித்தது. இருவருமே தங்கள் மாடு என விடாப்பிடியாக இருந்ததால் போலீசார் ஒரு நூதன டெஸ்ட் ஒன்றை வைத்தனர்.
அதாவது, இரண்டு பேரையும் கூப்பிட்டு மாடு யாருடன் அதிக பாசம் காட்டுகிறது என்று பார்க்க வேண்டும் என்று கூறினர். அதன் அடிப்படையில்தான் மாட்டை யாருடன் ஒப்படைப்பது என முடிவு செய்வோம் என்று கூறிவிட்டார்களாம். அதன்படி மாட்டை இருவருமே நெருங்கி பிடிக்க சொல்லியிருக்கிறார்கள். அந்த எருமை மாடோ தற்போது வளர்த்து வரும் பழனிவேலுடன் தான் அதிக பாசம் காட்டியிருக்கிறது. கயிற்றை அவிழ்த்து விட்டாலும் பழனிவேல் பின்னாலே சென்றது.
இதன் அடிப்படையில் முடிவுக்கு வந்த போலீசார், எருமை மாட்டை பழனிவேல் அழைத்து செல்ல அனுமதி அளித்தனர். மாட்டை பழனிவேல் அழைத்து சென்றாலும் அவர் கொண்டு செல்வது தங்களுடைய எருமை மாடு என்று உறுதியாக இருந்த பாலமுருகன்..அங்கு இருந்த ஆவேசமாக கிளம்பி சென்றார். எருமை மாட்டின் உண்மையான உரிமையாளரை கண்டுபிடிக்க போலீசார் கையாண்ட இந்த யுக்தியை அங்கிருந்த சிலர் விமர்சிக்காமலும் இல்லை..












Click it and Unblock the Notifications