ரூ.600க்கு டிக்கெட் வாங்கியும் உள்ளே விடல.. லியோ படத்துக்கு போலி டிக்கெட்: விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி
கடலூர்: 'லியோ' படம் பார்க்க வந்த விஜய் ரசிகர்கள், போலி டிக்கெட்டுடன் வந்ததாக கூறி, அவர்களை தியேட்டரில் இருந்து வெளியேற்றியதால் பண்ருட்டியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரசிகர் மன்றத்தில் ரூ.600 கொடுத்த்து டிக்கெட் வாங்கியதாக விஜய் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரசிகர்களின் பெரும் வரவேற்புக்கு மத்தியில் வெளியாகியுள்ளது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இன்று அதிகாலையே 'லியோ'திரைப்படம் வெளியான நிலையில், தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது.

லியோ ரிலீஸ்: தமிழ்நாடு முழுவதும் 'லியோ' திரைப்படம் வெளியான தியேட்டர்கள் முன்பு விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். திரையரங்கங்கள் முன்பு கூடிய ரசிகர்கள் பேனர் வைத்து, கேக் வெட்டி, மேளதாளத்துடன் நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் சில இடங்களில் ரசிகர்கள், போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளின் நடுவிலும் பட்டாசு வெடித்தும், கூட்டமாக கூடி ஆட்டம் போட்டும், தேங்காய் உடைத்தும் கொண்டாடினர்.
'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ள்ளது. லியோ படத்தின் முதல் பாதி சிறப்பாக உள்ளதாகவும், இடைவேளைக்குப் பிறகு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் இன்று 'லியோ' ஃபீவர் அடிக்கும் நிலையில், போலி டிக்கெட்டை பணம் கொடுத்து வாங்கி ரசிகர்கள் ஏமாந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலி டிக்கெட்: கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள புவனேஸ்வரி தியேட்டரில் இன்று 'லியோ' படம் பார்க்க ரசிகர்கள் திரண்டிருந்தனர். அப்போது தியேட்டருக்குள் சென்று படம் பார்க்க முயன்ற ரசிகர்கள் பலரை, தியேட்டர் நிர்வாகத்தினர், இது போலி டிக்கெட் எனக் கூறி படம் பார்க்க உள்ளே அனுமதிக்காமல் வெளியேற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலி டிக்கெட்டுகளை கொண்டு வந்துள்ளதாக கூறி, 'லியோ' படம் பார்க்க வந்த ரசிகர்களை தியேட்டருக்குள் செல்ல அனுமதிக்க ஊழியர்கள் மறுத்தனர். அப்போது, நாங்கள் பணம் கொடுத்து தான் டிக்கெட் வாங்கியதாக ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ரசிகர் மன்றத்தில் ரூ. 600 கொடுத்து டிக்கெட் வாங்கியதாக அவர்கள் முறையிட்டனர். 600 ரூபாய் காசு கொடுத்து டிக்கெட் வாங்கிவிட்டு படம் பார்க்க முடியாமல் வெளியே நிற்கிறோம் எனத் தெரிவித்தனர்.

ரசிகர்கள் குமுறல்: 600 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி, வேலையை விட்டுவிட்டு, இன்று ஒருநாள் சம்பளத்தை இழந்து, காலையிலேயே படம் பார்க்க வந்தால், போலி டிக்கெட் என சொல்கிறார்கள் என ரசிகர்கள் குமுறலுடன், தியேட்டர் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்களையும் படம் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
தகவல் அறிந்து காவல்துறையினர் தியேட்டருக்கு ரைந்து வந்து போலி டிக்கெட் வைத்திருந்த ரசிகர்களை அங்கிருந்து வெளியேற்றினர். இதனால் படம் பார்க்க முடியாத ரசிகர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். திரையரங்குகளின் இருக்கைகளின் எண்ணிக்கை விட அதிக அளவில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் டிக்கெட் விநியோகித்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications