விஜயகாந்த் திமுக கிட்ட கேட்ட கணக்கு.. "அந்த 3 லட்சம்.. நியாயமா இருக்கனுமா இல்லையா".. பறந்த கோரிக்கை
என்எல்சி விரிவாக்க பணிக்கு எதிரான போராட்டம் குறித்து விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்
கடலூர்: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்எல்சி) விரிவாக்கப்பணி நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதி மக்கள் இந்நவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து கூறியுள்ளார்.
நாட்டின் நவரத்தின பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்எல்சியானது தற்போது ஆண்டுக்கு 30 கோடி டன் அளவுக்கு நிலக்கரியை உற்பத்தி செய்கிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தை விரிவாக்க கடந்த 2006ம் ஆண்டு முடிவெடுக்கப்பட்டு அதற்கான நிலம் நெய்வேலியின் சேத்தியார் தோப்பு பகுதிக்கு உட்பட்ட மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி மற்றும் கரிவெட்டி ஆகிய கிராமங்களிலிருந்து கையகப்படுத்தப்பட்டது.
இந்நிலம் கையகப்படுத்தப்பட்டதோடு அந்நிறுவனம் நின்றுவிட்டது. அதன் பின்னர் எந்த விரிவாக்க பணிகளையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் தற்போது இவ்வாறு கைப்பற்றப்பட்ட நிலங்களை சமன்படுத்தும் பணிகளை என்எல்சி தொடங்கியுள்ளது. இதற்காக ஏற்கெனவே கைப்பற்றப்பட்ட நிலங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறது. இந்நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நிலுவைத்தொகை
இது குறித்து அவர்கள் கூறுகையில், "நிலம் கையகப்படுத்தப்பட்டபோது ரூ.6 லட்சம் அளவுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் இந்நிவாரணத் தொகை ரூ.3 லட்சம் கூடுதலாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் தற்போது வரை இந்த கூடுதல் நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை. இதனை வழங்கக்கோரிதான் நாங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறோம்" என்று தெரிவிக்கின்றனர். இந்த போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி முழு ஆதரவை அறிவித்திருக்கிறது. மட்டுமல்லாது இக்கட்சியின் சார்பில் கடலூர் மாவட்டம் முழுவதும் இன்று 'பந்த்'க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த்
இவ்வாறு இருக்கும் நிலையில்தான், என்எல்சி விவகாரம் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "என்எல்சி சுரங்க விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியிருந்தார். தற்போது அராஜக முறையில் விளை நிலங்களை கையகப்படுத்தும் என்எல்சி நிர்வாகத்திற்கும், அதனை தடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் தமிழக அரசுக்கும் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

அடக்குமுறை
மேலும் தமிழக காவல்துறையை பயன்படுத்தி மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு விளை நிலங்களை அபகரிக்க முயல்வது எந்த வகையில் நியாயம்?. மக்களுக்கான திட்டங்களை மட்டுமே மத்திய மாநில அரசுகள் கொண்டுவர வேண்டும். அதை விடுத்து, மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில் எந்த ஒரு திட்டங்களை கொண்டு வந்தாலும் அதனை ஏற்று கொள்ள முடியாது. மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக குரல் கொடுப்பது தேமுதிகதான்.

ஆதரவு
எனவே மக்களின் எதிர்ப்பை மீறி விளை நிலங்களை கையகப்படுத்துவதை என்எல்சி நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்காமல் நிலம் கையகப்படுத்தும் பணியை உடனடியாக தடுத்து நிறுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். ஏற்கெனவே பாமக சார்பில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வெளிவந்துள்ள விஜயகாந்தின் அறிக்கை, இதற்கு வலு சேர்ப்பதைப்போல அமைந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications