மோகன் மீது மோகம்.. கணவரை கொன்று வாழைக்கு உரமாக்கிய விஜயலட்சுமி.. கடலூரில் திக் திக்!
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கணவனை கொன்று வாழை மரத்தின் அடியில் மனைவி புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அடுத்த எஸ் புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (47). இவர் தனது சகோதரியின் மகளான விஜயலட்சுமியை (40) திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 18 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது, இரு பிள்ளைகள் உள்ளனர். ராஜசேகர் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு வெளியூருக்கு சென்றுவிடுவதை வழக்கமாக வைத்திருந்தாராம்.

9 மாதங்கள் காணவில்லை
பின்னர் அவருக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போதுதான் வீடு திரும்புவாராம். இந்த நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. ராஜசேகர் குறித்து எந்த ஒரு தகவலும் தெரியாத நிலையில் விஜயலட்சுமியின் தம்பி சிவகுமார் தனது அக்காவிடம் விசாரித்துள்ளார்.

வாழைக்கு உரம்
அப்போதுதான் ராஜசேகரை கொன்று வாழைக்கு உரமாக போட்டுவிட்டதாக விஜயலட்சுமி அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பண்ருட்டி போலீஸார், வருவாய் துறையினருடன் விஜயலட்சுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

விஜயலட்சுமியுடன் சண்டை
விசாரணையில் விஜயலட்சுமி கூறுகையில் ராஜசேகர் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு வெளியூர் சென்று விடுவார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இந்த விஷயம் குறித்து தகவலறிந்த ராஜசேகர் கண்டித்து வந்துள்ளார். கடந்த 9 மாதங்களுக்கு முன்னர், கள்ளக்காதல் தவறு, அவனை விட்டு விடு என ராஜசேகர் , விஜயலட்சுமிக்கு அறிவுரை வழங்கியதாக தெரிகிறது.

ராஜசேகர் தகராறு
இந்த நிலையில் ராஜசேகர் வீட்டுக்கு வரும் போது விஜயலட்சுமியும் மோகனும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதை பார்த்த ராஜசேகர் கோபமடைந்து தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயலட்சுமியும் மோகனும் சேர்ந்து ராஜசேகரை கொன்று வாழைத் தோப்பில் புதைத்தனர். தனது தம்பி, ராஜசேகர் குறித்து அடிக்கடி கேட்டு வந்ததால் உண்மையை கூறிவிட்டேன் என்றார். இதையடுத்து விஜயலட்சுமியை கைது செய்த போலீஸார், மோகனை தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications