பிரதமர் மோடியின் பிறந்த நாள்... 1 லட்சம் பேர் ரத்த தானம்...உலக சாதனை.. மத்திய அமைச்சர் பெருமிதம்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினத்தை பாஜக 15 நாட்களுக்கு கொண்டாட திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நேற்று ரத்த தான முகாமை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்.
இந்த முகாம் நாடு முழுவதும் 5,980 இடங்களில் அக்டோபர் 1ம் தேதிவரை நடைபெறுகிறது. தற்போது வரை இந்த முகாம் மூலம் 1 லட்சம்பேர் ரத்ததானம் செய்துள்ளதாகவும் இது உலக சாதனை என்றும் அமைச்சர் மாண்டவியா அறிவித்துள்ளார்.
இதேபோல பல்வேறு திட்டங்களை பாஜகவினர் செயல்படுத்தி வருகின்றனர். ஏற்கெனவே பிரதமரின் பரிசு பொருட்கள் ஏலத்தில் விடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பரிசுப்பொருட்கள் ஏலம்
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினத்தை கொண்டாடும் விதமாக பாஜகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளை செயல்படுத்தி வருகின்றனர். இதில் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்காக நிதி திரட்டும் விதமாக பிரதமரின் பரிசு பொருட்களை ஏலத்தில் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. உலக தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர் என பல்வேறு தரப்பினரும் பிரதமருக்கு அளித்த பரிசு பொருட்கள் இந்த ஏலத்தில் விடப்படும்.

கண்காட்சி
இதில் பெறப்படும் தொகையானது தூய்மை கங்கை திட்டத்திற்கு செலவிடப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதேபோல, நரேந்திர மோடியின் சிறு வயது முதல் அவர் பிரதமராக தேர்வானது வரையிலான வாழ்க்கை வரலாறு கண்காட்சி டெல்லி பாஜக அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா திறந்து வைத்தார். இதில் பிரதமரின் சிறு வயது புகைப்படங்கள் உட்பட பல சுவாரிய தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

ரத்ததான முகாம்
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ரத்த தான முகாமுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 5,980 இடங்களில் அக்டோபர் 1ம் தேதிவரை இந்த முகாம்கள் நடைபெறுகின்றன. இதனை தொடங்கி வைக்கும் விதமாக டெல்லி சப்தரஜங் மருத்துவமனையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று ரத்த தானம் செய்தார். இதனையடுத்து பல்வேறு இளைஞர்கள் இரத்த தானத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவு வரை ரத்த தானம் செய்தவர்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்தை கடந்திருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.

உலக சாதனை
தற்போது காலை நிலவரப்படி இந்த எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது என அமைச்சர் மன்சுக் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு வரை கடந்த 2014ல் 87,059 பேர் ரத்த தானம் செய்ததுதான் மிகப்பெரிய எண்ணிக்கையாக கருத்தப்பட்டிருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்திருப்பது உலக சாதனை என அமைச்சர் கூறியுள்ளார். இந்த இயக்கத்தில் பங்கேற்று ரத்த தானம் செய்ய விரும்புவர்கள் 'ஆரோக்ய சேது' செயலி அல்லது 'இ ரக்த்கோஷ்' இணைய பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும்.












Click it and Unblock the Notifications