"முடிச்சிடுங்க".. டிஜிபிக்கு ஸ்டாலின் போட்ட உத்தரவு.. மீட்கப்பட்ட சிலைகள்.. தமிழக அரசிடம் ஒப்படைப்பு
வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 10 சாமி சிலைகள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டன
டெல்லி: வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட, தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்ட, விலைமதிப்பற்ற 10 கோயில் சிலைகள், டெல்லியில் உள்ள இந்திய தொல்பொருள் துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டன.
Recommended Video
தமிழக கோவில்களில் இருந்து கடந்த காலங்களில் ஏராளமான சாமி சிலைகள் திருடு போயின.. எனவே, இதுகுறித்து குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவை சிலை தடுப்பு பிரிவினரால் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
மேலும், மாயமான சிலைகளை வெளிநாடுகளில் இருந்து மீட்பதற்கான முயற்சிகளை போலீசார் எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினும், டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு உத்தரவிட்டார்.

ஸ்டாலின் உத்தரவு
முதல்வரின் இந்த உத்தரவையடுத்து, திருடுபோன சிலைகளை மீட்பதற்காகவே தனிப்படை அமைக்கப்பட்டது... அப்போதுதான், நம் கோயில்களில் இருந்து திருடுபோன பல சிலைகள், வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களிலும், கலைப்பொருள் சேகரிப்பாளர்களிடமும் இருப்பது தெரியவந்தது... உடனே, இந்த சிலைகள் எல்லாம் நம்முடைய கோவில்களில் இருந்து திருடப்பட்டவைதான் என்பதை நிரூபிக்க சாட்சியங்கள், தடயங்கள் சேகரிக்கப்பட்டன.. அவை எல்லாமே சட்டப்படியான ஆதாரங்கள் ஆகும்.

தமிழக அரசு
இந்த ஆதாரங்களை தமிழக அரசு மூலம், நம் சிலைகள் உள்ள அந்தந்த நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது... இறுதியில், அந்த சிலைகள் எல்லாம், தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்டவை என்பது நிரூபிக்கப்பட்டது.. அதன்பிறகு, அந்த சிலைகளை, அந்தந்த நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு மீட்டு வர நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.. தமிழக கோவில்களில் இருந்து 10 சிலைகள் திருடப்பட்டுள்ளன.. இவைகள் விலைமதிப்பற்றவை.. அவைகள் உலோக மற்றும் கற்சிலைகள் ஆகும்.. அமெரிக்கா, ஆஸ்திரேலியாவின் மியூசியங்களில் இருந்து மீட்கப்பட்டன..

10 சிலைகள்
அதில் 2 துவாரபாலன் சிலைகள் தென்காசி மாவட்டம் அத்தானநல்லூர் மூன்றீஸ்வரமுடையார் கோவிலை சேர்ந்தவை.. நடராஜர் சிலையானது, தஞ்சை மாவட்டம் புன்னைநல்லூர் கைலாசநாதர் கோவிலையும், கங்காளமூர்த்தி, நரசிங்கநாதர் சிலைகள் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி நரசிங்கநாதர் கோவிலையும், விஷ்ணு, ஸ்ரீதேவி சிலைகள், அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி கிராமம் வரதராஜபெருமாள் கோவிலையும், சிவன்-பார்வதி சிலை, தஞ்சை மாவட்டம் தீபாம்பாள்புரம் வான்மீகிநாதர் கோவிலையும், குழந்தை சம்பந்தர் சிலை நாகை மாவட்டம் சாயவனேஸ்வரர் கோவிலையும் சேர்ந்தவையாகும்.. ஆனால், நடனமாடும் குழந்தை சம்பந்தர் சிலை மட்டும் எந்த கோவிலை சேர்ந்தது என்று தெரியவில்லையாம்.

டிஜிபி சைலேந்திரபாபு
அந்த 10 சிலைகளையும், தமிழக அரசிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சிதான் டெல்லியில் நடந்தது. மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷண்ரெட்டி, தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபுவிடம் அந்த சிலைகளை ஒப்படைத்தார். அப்போது மத்திய அமைச்சர் எல்.முருகன், காவல்துறை இயக்குநர் ஜெயந்த் முரளி மற்றும் சிலை தடுப்பு பிரிவு அதிகாரிகள் உடன் இருந்தனர்... இந்த சிலைகள் தமிழகம் கொண்டு வரப்பட்டு, அதன்பிறகு, கும்பகோணம் சிறப்பு கோர்ட்டில் ஒப்படைக்கப்படும்... இறுதியில், சம்பந்தப்பட்ட கோவில்களில் சிலைகள் ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications