10 திமுக எம்பிக்கள் யார் யார்? தமிழக எம்.பி.க்கள் சஸ்பெண்ட்? இன்று அவையில் முடிவு! எகிறும் பரபரப்பு
டெல்லி: மத்திய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு அனுமதி மறுப்பதை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே, 10 திமுக எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்வது குறித்து இன்று காலை முடிவு எடுக்கப்படும் என்று மாநிலங்களவை செயலகம் தகவல் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 10 ஆம் தேதி தொடங்கியது. அடுத்த மாதம் 4 ஆம் தேதி வரை இந்தக் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கியதில் இருந்து எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

எதிர்க்கட்சி எம்பிக்களின் கேள்விகளுக்கு அமைச்சர்களும் பதிலளித்து வருகிறார்கள். கடும் அமளி, காரசார விவாதம் என அனல் பறக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நடைபெற்று வருகின்றன.
இரு அவைகளிலும் விவாதம் - அமளி
இதில், தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு அனுமதி மறுப்பதை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்நாட்டு எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதில் திமுக, மதிமுக, விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.. "குறைக்காதே குறைக்காதே தொகுதிகளை குறைக்காதே" என்று எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினார்கள்.
முன்னதாக மக்களவைக்கு பல எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மத்திய அரசை விமர்சித்து வாசகங்கள் எழுதப்பட்ட டி-சர்ட்களை அணிந்து வந்திருந்தனர். "நியாயமான எல்லை நிர்ணயம், தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்" என்ற வாசகம் அச்சிடப்பட்ட வெள்ளை நிற டி-சர்ட்களை அணிந்து மக்களவைக்கு திமுக எம்பிக்கள் வந்திருந்தனர்
யாரந்த 10 எம்பிக்கள்
சபாநாயகர் ஓம் பிர்லா அந்த எம்பிக்களுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.. அவையை ஒழுங்காக நடத்த விரும்பினால் சரியான ஆடையில் வருமாறு கேட்டுக் கொண்டார். டி ஷர்ட் விவகாரம் தொடர்பாக மதியம் 12 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
மதியம் 12 மணிக்கு அவை மீண்டும் கூடியபோதும் திமுக எம்பிக்கள் அதே டி ஷர்ட் அணிந்து அவைக்கு வந்தனர். இதனால் மக்களவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு அவை கூடியபோதும் திமுக எம்பிக்கள் டி ஷர்டை மாற்றவில்லை. இதன்காரணமாக மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. பிறகு 10 திமுக எம்பிக்கள் விதிகளை மீறி உடையணிந்து அவை மரபுகளை மீறியதாக அவைக் குறிப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மாநிலங்களவை ஒத்திவைப்பு
மக்களவையை போன்றே மாநிலங்களவையிலும் கண்டன வாசகங்கள் அச்சிடப்பட்ட டி ஷர்ட் அணிந்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் பங்கேற்றிருந்தனர்.. இதற்கு அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் ஆட்சேபம் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக மதியம் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மதியம் 12 மணிக்கு மறுபடியும் அவை கூடியதும் திமுக எம்பிக்கள் அதே டி ஷர்ட் அணிந்திருந்தனர். இதனால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலிலும் திமுக எம்பிக்கள் டி ஷர்ட்டை மாற்றவில்லை. இதைத் தொடர்ந்து மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலையில், 10 திமுக எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்வது குறித்து இன்று அதாவது மார்ச் 21ம் தேதி காலை முடிவு எடுக்கப்படும் மாநிலங்களவை செயலகம் தகவல் தெரிவித்துள்ளது. அந்தவகையில், அந்த 10 எம்.பி.க்கள் யார் யார் என்பது குறித்து இன்று வெளியாகும் என்பதால், அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அனைத்து எம்பிக்களும் வரவேண்டும் - கொறடா உத்தரவு
இதனிடையே, இன்று கட்டாயம் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும் என்று மக்களவை பாஜக எம்பிக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்திருககிறார்.. தனது கட்சியின் அனைத்து எம்.பிக்களும் தவறாமல் அவை நடவடிக்கையில் கலந்து கொள்ள வேண்டும் என்று பாஜக கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், பட்ஜெட் மற்றும் அதன் மீதான மானிய கோரிக்கை ஆகியவை இன்று லோக்சபாவில் நிறைவேற்ற வேண்டியிருப்பதால் அனைத்து பாஜக எம்பிக்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications