100 நாள் வேலைத் திட்டத்தில் எந்த மாநிலத்திற்கு எவ்வளவு சம்பளம்.. மத்திய அரசு கணக்கிடுவது எப்படி?
டெல்லி: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் (100 நாள் வேலைத்திட்டத்தில்) தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ப 4 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை ஊதியம் உயர்த்தப்பட்டது. இந்த ஊதிய உயர்வினை மத்திய அரசு எப்படி கணக்கிட்டது என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள ஏழை குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு உத்தரவாதமான சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை (100 நாள் வேலை திட்டம்) மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டு வந்தது. இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது..

இந்த நிலையில் அதிகரித்து வரும் விலைவாசி மற்றும் வாழ்க்கை செலவினங்கள் அதிகரிப்பு காரணமாக, 100 நாள் வேலை திட்டத்தில் வழங்கப்படும் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. குறைந்தபட்ச சம்பளம் தொடர்பாக அனூப் சத்பதி கமிட்டி மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருந்த ரூ.375ஐ, 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்று பரிந்துரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பரிந்துரையை ஏற்று, 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கான சம்பளத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், இந்த சம்பள உயர்வுக்கான அனுமதியை பெற தேர்தல் கமிஷனின் அனுமதி அவசியம் ஆகும். இதை பரிசீலித்த தேர்தல் கமிஷனும், இந்த சம்பள உயர்வுக்கு அனுமதி கொடுத்துள்ளது.
இதன்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (100 நாள் வேலை திட்டம்) பயானளிகளுக்கு சம்பளத்தை உயர்த்தி மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இதன்படி மாநிலத்தை பொறுத்து 4 முதல் 10 சதவீதம் வரை சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக கோவாவில் ரூ.34 அதிகரித்துள்ளது. இனி கோவா மாநிலத்தில் 100 நாள் வேலை திட்ட ஊழியர்களுக்கு ரூ.356 கிடைக்கும். ஆந்திராவில் ரூ.28 அதிகரிக்கப்பட்டுள்ளதால் அங்கு சம்பளம் ரூ.300 ஆக மாறி உள்ளது. குறைந்தபட்சமாக உத்தரகாண்ட் மற்றும் உத்தரபிரதேசத்தில் வெறும் ரூ.7 மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த மாநில பயனாளிகள் இனி நாளொன்றுக்கு ரூ.237 பெறுவார்கள்.
100 நாள் வேலை திட்டத்தில் அதிக சம்பளமாக ஹரியானா மாநில தொழிலாளிகள் ரூ.374-ம், குறைந்த சம்பளமாக அருணாச்சல பிரதேசம், நாகாலாந்தில் ரூ.234-க்கும் இருக்கிறது. தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கான சம்பளம் ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளது. இனி தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றுவோருக்கு தினசரி சம்பளமாக ரூ.319 கிடைக்க போகிறது.
இதனிடையே நாடு முழுவதும் 100 நாள் வேலைத்திட்ட ஊதிய உயர்வினை மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் எப்படி கணக்கிட்டது என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி 100 நாள் வேலைத்திட்ட ஊதியம் என்பது வேளாண் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணுடன் தொடர்புபடுத்தி உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இருந்து இந்த விலை குறியீட்டு எண் 7.7 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த எண் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். விலை குறியீட்டு எண், ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு சட்ட விதிகள் ஆகியவை அடிப்படையில், ஊதியம் கணக்கிடப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications