மத்திய அரசுக்கு எதிராக மொத்தமாக உச்ச நீதிமன்றம் போன 14 எதிர்க்கட்சிகள்.. பரபரப்பு புகார்
டெல்லி: மத்திய புலனாய்வு அமைப்புகளை அரசு தவறாக பயன்படுத்துவதாகக் கூறி 14 எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளன.
சிபிஐ, அமலாக்கத்துறை, என்ஐஏ போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளை அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக 14 எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளன.
மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மற்றும் அமலாக்க இயக்குநரகம் (இடி) போன்ற அமைப்புகள் பாஜகவின் எதிர்ப்பாளர்களை மட்டுமே குறிவைத்து வருவதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன.
இதனிடையே பாஜகவில் இணைந்தவுடன் அப்படிப்பட்ட தலைவர்கள் மீதான வழக்குகள் அடிக்கடி கைவிடப்படுவதாகவும் அல்லது புதைக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர்.

உச்ச நீதிமன்றம்
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாஜக, புலனாய்வு அமைப்புகள் சுதந்திரமாக செயல்படுவதாக கூறியுள்ளது. எனினும் உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மொத்தமாக முறையிட்டு இருப்பதால் மத்திய அரசுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. ஒருவேளை இந்த வழக்கை ஏற்று உச்ச நீதிமன்றம் நடத்தினால், அது பாஜகவிற்கு நோட்டீஸ் அனுப்பி பதில் அளிக்க கோரும்.

மணிஷ் சிசோடியா
அண்மையில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், டெல்லி துணைமுதல்வருமான மணீஷ் சிசோடியா மதுபான கொள்முதல் தொடர்பாக ஊழல் நடந்ததாக கைது செய்யப்பட்டார். இதேபோல் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்வின் மகள் கவிதையும் அமலாக்கத்துறை , சிபிஐ விசாரித்து வருகின்றன. அவரும் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன. பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்விற்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டில் சிபிஐ தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது.

காங்கிரஸ்
ஏற்கனவே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இதே போன்றே சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி தங்களை நெருக்குவதாக குற்றம்சாட்டி வருகிறார். காங்கிரஸ் கட்சியும் பகிரங்கமாக பாஜக மற்றும் மத்திய அரசை குற்றம்சாட்டி வருகிறது.

சிபிஐக்கு எதிராக முறையீடு
முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் தலைவர் டிகே சிவகுமார் உள்பட காங்கிரஸ் கட்சியினர் சிலருக்கு எதிராக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ நடவடிக்கை எடுத்தது. தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications