23 பேரில் ஒருவர்.. சோனியாவுக்கு ஏற்கனவே 2 லெட்டர் போட்ட குலாம் நபி.. இன்று ராகுலுடன் மோதல்!
23 தலைவர்களில் ஒருவர் சோனியாவுக்கு கடிதம் எழுதியவர் என்று கூறப்படுகிறது
டெல்லி: காங்கிரஸ் விவகாரம் சூடாகியுள்ளது. 23 மூத்த தலைவர்கள் இணைந்து சோனியா காந்திக்கு கடிதம் எழுதப் போக இன்று அந்தக் கடிதம் குறித்து காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது. அதை விட முக்கியமாக, 23 பேரில் ஒருவர் ஏற்கனவே 2 முறை இதுபோல சோனியாவுக்கு கடிதம் எழுதியவராம். அவர்தான் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்!
Recommended Video
லாக்டவுன் சமயத்தில் இதுபோல அவர் 2 முறை சோனியா காந்திக்கு பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக் காட்டி இவர் கடிதம் எழுதியுள்ளாராம். இதுதான் தற்போது பரபரப்பைக் கிளப்பி விட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்குள் மிகப் பெரிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் இந்த 23 தலைவர்களின் கடிதத்தின் சாராம்சம் ஆகும். இந்தக் கடிதத்தில் நான்கு முன்னாள் முதல்வர்கள், பல்வேறு காரியக் கமிட்டி உறுப்பினர்கள், எம்பிக்கள், பல முன்னாள் அமைச்சர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்தக் கடிதம் குறித்து காங்கிரஸ் தலைவர்களுடன் விவாதித்துள்ளார் சோனியா காந்தி. குலாம் நபி ஆசாத் ராஜ்யசபா காங்கிரஸ் தலைவராக இருக்கிறார். அவருடனும் பேசிய சோனியா காந்தி, கடிதத்தில் உள்ள விவரங்கள் குறித்து விரிவான விவாதத்திற்குத் தான் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இந்த 23 தலைவர்களும் சோனியா காந்தியின் தலைமையை கேள்வி கேட்கவில்லை. மாறாக காங்கிரஸ் கட்சியின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.. பெருமளவிலான மாற்றங்கள் தேவை என்பதைத்தான் இவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் யார் மீதும் இந்த தலைவர்கள் குற்றம் சாட்டவில்லை.
இதுகுறித்து ஒரு தலைவர் கூறுகையில், "சோனியா காந்தியின் பங்கு மிகவும் முக்கியமானது, இன்றியமையாதது. அவர்தான் 2004, 2009 நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற முக்கியக் காரணம். அவரது குடும்பம் செய்த தியாகம் மிக மிக முக்கியமானது. அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அதற்காக பெரிதும் அவர்களை மதிக்கிறோம். நாங்கள் கடிதத்தில் எழுப்பியுள்ளது கட்சி சார்ந்த விவகாரங்கள்தான்" என்று விளக்கினார்.
இன்னொரு தலைவர் கூறுகையில், "50க்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் காரியக் கமிட்டியில் இருக்கிறார்கள். வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரச்சினைகளை விவாதிக்க முடியாது. நேரில் அழைத்துப் பேசினால்தான் நல்லது. அதுதான் சரியாக இருக்கும் " என்றார். ஆக மொத்தத்தில் இன்றைய காரியக் கமிட்டிக் கூட்டம் நிச்சயம் படு சூடான விவாதத்தைக் கொண்டதாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.












Click it and Unblock the Notifications