2024 லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்.. ப. சிதம்பரம் தலைமையில் தேர்தல் அறிக்கை குழு நியமனம்
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்கான குழுவை, காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்தியா கூட்டணி அமைத்துள்ள எதிர்கட்சியினர் பல கட்ட கூட்டங்களை நடத்தி வரும் நிலையில் முன்கூட்டியே காங்கிரஸ் கட்சி தேர்தல் தயாரிப்பு அறிக்கை குழுவை அறிவித்துள்ளது.
2005ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரைக்கு இந்தியாவில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சி. 2014ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைத்தது. மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வருகிறது பாஜக.

அதே நேரத்தில் எதிர் கட்சியினர் ஒருங்கிணைத்து பாஜகவிற்கு எதிராக இந்தியா கூட்டணி அமைத்து கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். மல்லிகாஜூன கார்கே பிரதமர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்ற வெற்றி அக்கட்சி தலைவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வரும் லோக்சபா தேர்தலுக்கான கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரிக்க, ராஜ்யசபாவின் மூத்த எம்.பி.யும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தலைமையில் 16 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் வெள்ளிக்கிழமை இரவு அறிவித்தது.
இந்த மாதத்திற்குள் ஒரு ஸ்கிரீனிங் கமிட்டியையும், ஒன்று அல்லது இரண்டு நாட்களில் ஒரு அறிக்கைக் குழுவையும் உருவாக்குவதன் மூலம் விரைவில் வேட்பாளர்களை இறுதி செய்ய முடிவு செய்துள்ளது காங்கிரஸ் கட்சி. இந்த நிலையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி.
ப.சிதம்பரம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் சத்தீஸ்கர் துணை முதல்வர் டிஎஸ் சிங்தியோ ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார், இதில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ராவும் உறுப்பினராக உள்ளார். ப.சிதம்பரம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அனைத்து மாநிலங்களுக்கும் சென்று மக்களிடம் கருத்து கேட்டு அதற்கேற்ப அறிக்கை தயாரிப்பார்கள்.












Click it and Unblock the Notifications