செல்போன் பேசியபடியே வாகனம் ஓட்டுபவரா நீங்கள்? இந்த 'அபாய சங்கு’ உங்களுக்குதான்- நடந்ததை பாருங்க!
டெல்லி: இந்தியாவில் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியதால் மட்டுமே கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் 3,395 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார். ராஜ்யசபாவில் நாட்டின் வாகன விபத்துகள் தொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்த புள்ளி விவரங்களைப் பகிரங்கப்படுத்தினார்.
ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அளித்த பதில்: நாட்டில் 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைகள் குறித்து விவரங்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல்துறை அளித்துள்ளது.

சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை:
2018-ம் ஆண்டு 1,57,593
2019-ம் ஆண்டு 1,58,984
2020-ம் ஆண்டு 1,38,383
2021-ம் ஆண்டு 1,53,972
2022-ம் ஆண்டு 1,68,491
2022-ம் ஆண்டில் போக்குவரத்து விதிகளை மீறியதால், உயிரிழந்தவர்களின் விவரங்களும் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி,
- வாகனங்களை அதிக வேகத்தில் இயக்கியதால் ஏற்பட்ட விபத்தில் 1,19,904 பேர் உயிரிழந்தனர்.
- ஆல்கஹால் மற்றும் போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை இயக்கியதால் ஏற்பட்ட விபத்தில் 4,201 பேர் மரணம் அடைந்தனர்.
- தவறான பாதைகளில் சென்றதால் ஏற்பட்ட விபத்தில் 9,094 பேர் உயிரிழந்தனர்.
- சாலைகளில் சிவப்பு விளக்கு எல்லையைத் தாண்டியதால் ஏற்பட்ட விபத்தில் 1,462 பேர் மரணம் அடைந்தனர்.
- வாகனங்கள் ஓட்டும் போது மொபைல் போன் பேசிக்கொண்டே சென்றபோது ஏற்பட்ட விபத்தில் 3,395 பேர் பலியாகினர்.
- இதர காரணங்களால் 30,435 பேர் வாகன விபத்துகளில் உயிரிழந்தனர்.
மேலும் நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் எஞ்சியுள்ள 20,000 கிலோ மீட்டர் தூரத்திற்கான நெடுஞ்சாலைகளை அமைக்க தேசிய நெடுஞ்சாலைகள் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இந்த பணிகள் பல்வேறு நிலைகளில் உள்ளதாக கூறிய அவர், நடப்பு மற்றும் அடுத்த நிதியாண்டுகளில் சாலை கட்டுமானங்களை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார். தற்போது நடந்து வரும் திட்டப் பணிகளில் ஏற்பட்டுள்ள தடைகளைக் களையும் பொறி முறைகளை மேம்படுத்த உள்ளது. நாட்டில் நெடுஞ்சாலைகளை அமைப்பதில் வேகத்தை அதிகரிக்க அதிவேக மாதிரி முறையை பின்பற்ற மத்திய அரசு ஒப்புதல் வழ்ங்கியுள்ளது.
இவ்வாறு நிதி அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications