உச்சமடையும் இந்தியா-கனடா மோதல் போக்கு.. 41 கனடா தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது இந்தியா! கனடா கவலை
டெல்லி: இந்தியாவில் உள்ள கனடா நாட்டின் தூதரக அதிகாரிகளில் 41 பேரின் அதிகாரி அந்தஸ்த்தை மத்திய அரசு பறித்துள்ளது. இதனால் இன்று இந்த 41 பேரும் அவர்களின் குடும்பத்தினரும் இந்தியாவிலிருந்து வெளியேறுகின்றனர். இந்த நடவடிக்கைக்கு கனடா கவலை தெரிவித்திருக்கிறது.
கொலை: கடந்த ஜூன் மாதம் 8ம் தேதியன்று கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், சர்ரே நகரில் உள்ள குருத்வாரா வளாகத்தில் சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இவர் மீது இந்தியாவில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவர் காலிஸ்தான் விடுதலைக்கு செயல்பட்டதாகவும், காலிஸ்தான் புலிகள் படைக்கு ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி வழங்கியதாகவும் இந்திய உளவுத்துறை ஏற்கெனவே குற்றம்சாட்டியிருந்தது.

இந்தியாவின் வலியுறுத்தல்:இது தவிர கடந்த 2007ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா நகரில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று நடந்தது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் நிஜ்ஜார் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தார். இவர் கனடா குடியுரிமை பெற்ற அங்க வாழ்ந்து வந்ததால் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று பஞ்சாப் காவல்துறை கனடாவுக்கு கோரிக்கை வைத்தது. ஆனால் கனடா அதை ஏற்க மறுத்துவிட்டது. மேலும், கனடாவிலிருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவாக செயல்படும் பிரிவினைவாத குழுக்களுக்கு எதிரான உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்த சூழலில்தான் அவர் கனடாவில் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
ஆதாரம்: இது குறித்து விசாரணையில் இறங்கிய கனடா உளவுத்துறை, இந்த கொலையில் இந்தியா சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியது. இதனை அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக கூறி விமர்சித்துள்ளார். இந்த கொலைக்கு பின்னால் இந்தியாவின் நடவடிக்கைகள் இருப்பதற்கான உறுதியான காரணங்கள் இருக்கின்றன என்றும், இது தொடர்பான இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகரிடம் கலந்துரையாடியுள்ளதாகவும் கூறியுள்ளார். சமீபத்தில் ஜி20 மாநாட்டில் இந்தியாவுக்கு வந்த ஜஸ்டின் ட்ரூடோ, இந்த கொலைக்கான ஆதாரங்களை பிரதமரிடம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
மோதல்: ஆனால் இது தொடர்பாக இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கனடா அரசு இந்திய நாட்டின் தூதரக அதிகாரி ஒருவரை கனடாவிலிருந்து வெளியேற்றி உத்தரவிட்டது. அதேபோல இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவில் இருக்கும் கனடா நாட்டின் தூதரக அதிகாரி ஒருவரை மத்திய அரசு வெளியேற்ற உத்தரவிட்டது. இது இரு நாடுகளுக்கும் இடையான நல்லுறவை கடுமையாக பாதித்தது. இதனையடுத்து இந்தியாவில் பணியாற்றும் கனடா அரசின் தூதரக அதிகாரிகளில் 41 பேரை வெளியேற்ற வேண்டும் என்று இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
விரிசல்: தற்போது இந்த செய்திகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது கனடா நாட்டின் சார்பாக இந்தியாவில் தூதர அதிகாரிகளாக பணியாற்றுபவர்களில் 21 பேர் மட்டும் இருந்தால் போதும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே மீதமுள்ள 41 பேருக்கான தூதரக அதிகாரிகளின் அந்தஸ்து பறிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இந்தியாவிலிருந்து வெளியேற இன்று கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் இவர்கள் வெளியேறியதை கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி உறுதி செய்திருக்கிறார். மேலும் இந்தியாவின் இந்த நடவடிக்கை இரு நாடுகளின் தூதரக சேவையை பாதிக்கும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் இரு நாட்டின் ராஜதந்திர உறவுக்குள் மேலும் விரிசலை கூர்மையடைய செய்திருக்கிறது.












Click it and Unblock the Notifications