5 மாநில சட்டசபை தேர்தல்: ஜனவரி 15 வரை பேரணிகள், யாத்திரைகளுக்கு அதிரடி தடை விதித்த ஆணையம்
டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கொரோனா காலம் என்பதால் 5 மாநிலங்களிலும் ஜனவரி 15ம் தேதி வரை பேரணிகள், பாத யாத்திரை, சைக்கிள் பேரணிக்கு தடை விதிக்கப்படுவதாகவும், வெற்றி பெற்ற பிறகு கொண்டாட்டங்களுக்கும், வெற்றி ஊர்வலங்களுக்கும் தடை விதிக்கப்படுவதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த வருடம் உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதில் பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி தவிர மற்ற மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. இந்த நிலையில் 5 மாநில தேர்தல் தேதிகள் மற்றும் விதிமுறைகள் தொடர்பான அறிவிப்புகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா இது தொடர்பான அறிவிப்புகளை இன்று செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.

தேர்தல் தேதிகள்
தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அளித்த பேட்டியில், 5 மாநிலங்களிலும் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி வாக்குப்பதிவு தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாப், உத்தரகண்ட், கோவா மாநிலங்களில் பிப்ரவரி 14ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மணிப்பூர்- பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 - 2 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை மார்ச் 10 நடக்க உள்ளது.

எத்தனை வாக்காளர்கள்
உ.பி., பஞ்சாப், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் 18.34 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 690 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் நடக்க உள்ள 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. தேர்தல் வழிகாட்டுதல்களை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.

விதிகள்
தேர்தல் நடத்தை வழிகாட்டுதல்களை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் மூலமாக வேட்புமனு தாக்கல் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 80 வயதைக் கடந்த மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு அளிக்கலாம். கொரோனா பரவலை கருத்திற்கொண்டு வாக்குச்சாவடிகளை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடு
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 16% அதிகரிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளை கருத்தில் கொண்டு, அனைத்து வாக்குச்சாவடிகளும் தரைத் தளத்திலேயே அமைக்கப்படும், 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம். 5 மாநிலங்களிலும் வாக்களிக்கும் நேரம் 1 மணி நேரம் அதிகரிக்கப்படும்.

5 மாநில விதிகள்
5 மாநிலங்களிலும் ஜனவரி 15ம் தேதி வரை பேரணிகள், பாத யாத்திரை, சைக்கிள் பேரணிக்கு தடை விதிக்கப்படுகிறது. வெற்றி பெற்ற பிறகு கொண்டாட்டங்களுக்கும், வெற்றி ஊர்வலங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது. வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ள நபர்கள் தொடர்பான விரிவான தகவல்களை அரசியல் கட்சிகள் தங்கள் இணையதளத்தில் பதிவேற்றுவது கட்டாயம். வேட்பாளரை தேர்வு செய்வதற்கான காரணத்தையும் அவர்கள் தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications