நம்பர் 4 நிதின் கட்கரி.. மகாராஷ்டிராவை சேர்ந்த 6 பேருக்கு மோடி அரசில் அமைச்சர் பதவி! யார் யார்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 6 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர். மூத்த அமைச்சர்கள் முதல் முதல் முறை எம்.பி வரை அமைச்சர் ஆகியுள்ளனர். அவர்கள் யார் யார் எனப் பார்க்கலாம்.

18 ஆவது மக்களவையின் தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4 ஆம் தேதி வெளியானது. இதில், 240 இடங்களை கைப்பற்றிய பாஜக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு 293 என்று பெரும்பான்மையை பெற்ற நிலையில், மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.

Narendra Modi BJP NDA cabinet ministers

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுள்ளார். பிரதமர் மோடியைத் தொடர்ந்து, ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். மோடி அமைச்சரவையில் 4வது இடத்தில் இருக்கிறார் நிதின் கட்கரி.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 6 எம்.பி.க்கள் நிதின் கட்கரி, பியூஷ் கோயல், ரக்ஷா கட்சே, முரளிதர் மொஹோல், ராம்தாஸ் அத்வாலே மற்றும் பிரதாப்ராவ் ஜாதவ் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். பாஜகவில் மத்திய அமைச்சர்களாக இருந்த நாராயண் ரானே, டாக்டர் பகவத் காரத் ஆகியோருக்கு புதிய அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை.

நிதின் கட்கரி: நாக்பூர் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்த நிதின் கட்கரி, நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் பாஜகவின் செயல்பாடு மோசமாக இருந்த விதர்பா பகுதியைச் சேர்ந்தவர். நிதின் கட்கரி வலுவான ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவர்.

முந்தைய மோடி அரசில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக அவர் பணியாற்றினார். இந்த ஆண்டு செப்டம்பர் - அக்டோபரில் நடைபெற இருக்கும் மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக விதர்பா பிராந்தியத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகளை பாஜக முடுக்கிவிட, கட்கரி முக்கியமானவர். இந்நிலையில் மீண்டும் கேபினட்டில் இடம்பெற்றுள்ளார் நிதின் கட்கரி.

பியூஷ் கோயல்: ராஜ்யசபா எம்.பி ஆக இருந்து வந்த பியூஷ் கோயல், மும்பை வடக்கு தொகுதியில் இருந்து தனது முதல் மக்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முந்தைய அரசில் வர்த்தகம், மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் போன்ற முக்கியமான பதவிகளை வகித்தார். பியூஷ் கோயல் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுடன் நெருக்கமானவராக அறியப்படுகிறார்.

பாஜக மூத்த தலைவர்களான வேத்பிரகாஷ் மற்றும் சந்திரகாந்தா கோயல் ஆகியோரின் மகனான பியூஷ் கோயல், அமைச்சராக பதவியேற்றது முதல் தொழில் மற்றும் வணிக சமூகத்துடன் நல்ல உறவைக் கொண்டுள்ளார். இவர் மீண்டும் அமைச்சராக இன்று பதவி ஏற்றுள்ளார்.

ராம்தாஸ் அத்வாலே: முந்தைய மோடி அரசில் சமூக நீதித்துறை அமைச்சராக இருந்த ராம்தாஸ் அத்வாலே, தனது இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) சார்பில் எந்த வேட்பாளரையும் நிறுத்தவில்லை, ஆனால் பொதுத் தேர்தலில் மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தார். பாஜக தலைமையிலான என்.டி.ஏ அரசு தலித் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக உரிய பிரதிநித்துவத்தை வழங்கும் என்பதை நிறுவும் வகையில் மீண்டும் அவரை அமைச்சர் ஆக்குகிறது பாஜக அரசு.

பிரதாப் ராவ் ஜாதவ்: சிவசேனா எம்.பி பிரதாப் ராவ் ஜாதவ், மராத்தா சமூகத்தை சேர்ந்தவர் மற்றும் விதர்பா பகுதியை சேர்ந்தவர். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் இருந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சிக்கு மாறிய பிரதாப்ராவ் ஜாதவ், தொடர்ந்து நான்காவது முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னதாக, பிரதாப்ராவ் ஜாதவ் 1995 மற்றும் 1999 க்கு இடையில் சிவசேனா- பாஜக அரசின் போது மகாராஷ்டிரா அமைச்சரவையில் மாநில அமைச்சராக இருந்தார். அவர் கிராமப்புற மேம்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் நாடாளுமன்றக் குழுக்களின் தலைவராக இருந்தார். இந்நிலையில் மீண்டும் அமைச்சராகியுள்ளார் ராம்தாஸ் அத்வாலே.

ரக்‌ஷா கட்சே: முன்னாள் பாஜக மூத்த தலைவரும், தற்போதைய என்.சி.பி சரத் பவார் கட்சியின் தலைவருமான ஏக்நாத் கட்சேவின் மருமகளான ரக்‌ஷா கட்சே, ரேவர் தொகுதியில் இருந்து இரண்டு முறை எம்.பி.யாக இருந்தவர். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ரக்ஷா காட்சே, ஜல்கான் மக்களவைத் தொகுதியில் 3.36 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத் பவார்) ஸ்ரீராம் பாட்டீலை தோற்கடித்தார். இந்நிலையில், அவர் மோடி அரசில் அமைச்சர் ஆகியுள்ளார்.

முரளிதர் மொஹோல்: முதல் முறையாக புனேயில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முரளிதர் மொஹோலுக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. அரசியல் ரீதியாக செல்வாக்கு மிக்க மராத்தா சமூகத்தை தங்கள் பக்கம் வைத்திருப்பதற்கான பாஜகவின் ஒரு வியூகமாகவே இது பார்க்கப்படுகிறது.

குறிப்பாக மராத்தா இடஒதுக்கீடு கோரி மனோஜ் ஜராங்கே பாட்டீல் புதிதாகத் தொடங்கப்பட்ட போராட்டத்தின் பின்னணியில் மொஹேல் அமைச்சர் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. மொஹோல், மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவர்.

மகாராஷ்டிராவில் லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் ஆறு மத்திய அமைச்சர்கள் போடியிட்டனர். அவர்களில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் நாராயண் ரானே ஆகியோர் வெற்றி பெற்றனர்.

ஆனால் மூன்று மாநில அமைச்சர்கள் தோல்வி அடைந்தனர். ராவ்சாகேப் தன்வே பாட்டீல், கபில் பாட்டீல் மற்றும் பாரதி பவார் ஆகியோர் தோல்வியைத் தழுவினர். இந்நிலையில், தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 6 பேர் மோடியின் 3வது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+