AI விஸ்வரூபம் எடுப்பதை பார்த்து இந்தியர்களுக்கு பயமே இல்லை! யூஸ் பண்ணிட்டா போச்சு- கெத்து மைண்ட்செட்
டெல்லி: ஏஐ தொழில் நுட்பத்தால் பலரும் வேலை இழக்கும் அபாயம் இருப்பதாக ஒட்டுமொத்த உலகமே அச்சப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில், இந்தியர்களின் மன நிலை வேறுமாதிரியாக இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று கூறியுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
இப்போது உலகில் எங்குப் பார்த்தாலும் ஏஐ என அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்தே பேச்சாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக சாட் ஜிபிடி வந்த பிறகு ஒட்டுமொத்த உலகமும் இதைப் பற்றிப் பேசுகிறது. சாட் ஜிபிடி, முதல் ஏஐ கருவி இல்லை இதற்கு முன்பே நாம் பல ஏஐ கருவிகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால், சாட் ஜிபிடி போல வலுவான ஒரு ஏஐ கருவியை நாம் பார்த்ததே இல்லை எனச் சொல்லலாம்.
சாட் ஜிபிடி ஏஐ துறையை அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்த்தியது. சாட் ஜிபிடியில் நாம் என்ன கேள்வி கேட்டாலும் அதற்கான பதிலை நறுக்கெனத் தரும். கதை கேட்டால் கதை சொல்லும்.. ஜோக் கேட்டால் ஜோக் சொல்லும்.. அவ்வளவு ஏன் கவிதை, லவ் லெட்டர் என அனைத்தையுமே சொல்லும் அந்தளவுக்கு ஒரு வலுவான ஏஐ கருவியாக சாட் ஜிபி இருக்கிறது. ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் இது வேலை செய்யும் என்பது இதன் மற்றொரு சிறப்பாகும்.
உற்பத்தி திறன் அதிகரிக்கும்: சாட் ஜிபிடிக்கு கிடைத்த இந்த வெற்றி மற்ற பல ஏஐ நிறுவனங்களுக்கு மிக பெரிய வாய்ப்பை திறந்துவிட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் புதுப்புது ஏஐ கருவிகள் வந்து நம்மை வியக்க வைத்து வருகிறது. ஏஐ துறையில் ஏற்படும் மாற்றங்கள் என்பது மிக பெரிய பாய்ச்சலாக இருந்தாலும் சிலர் இது குறித்து கவலை தெரிவித்தும் வருகின்றனர். ஏஐ கருவிகளால் அதிகப்படியான வேலையிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் பலரும் எச்சரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஏஐ தொழில் நுட்பத்தால் வேலையில் உற்பத்தி திறன் அதிகரிக்கும் என்று 51 சதவீத இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பிடபிள்யூ (PwC) என்ற நிறுவனம் ஆய்வறிக்கையை நடத்தியது. இந்த ஆய்வில் இந்தியர்கள் 51 சதவிகிதம் பேர் ஏஐ- யால் தங்களின் உற்பத்தி திறன் அதிகரிக்கும் என்று கூறியிருக்கின்றனர். இந்திய தொழிலாளர்களின் நம்பிக்கைகள் மற்றும் அச்சங்கள் 2023 என்ற தலைப்பில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
ஒரு கை பார்த்துவிடலாம்: அதில்தான் மேற்கூறிய முடிவுகள் வந்துள்ளன. சர்வதேச அளவில் 31 சதவீதம் பேரே ஏஐயால் உற்பத்தி திறனுக்கு பாதிப்பு இல்லை என்று கூறியிருக்கும் நிலையில், இந்தியர்களின் மனநிலை ஏஐ வந்தால் வரட்டும் அதையும் ஒரு கை பார்த்துவிடலாம் என்றே இருக்கிறது. இந்திய தொழில் துறை சரியான மேம்பாட்டு அணுகுமுறையுடன் அடுத்த கட்டத்திற்கு சென்றால் ஏஐ தொழில்நுட்பத்தை பிஸினசில் இணைப்பதில் இந்தியா முன்னோடியாக இருக்க முடியும்" என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
அதேபோல், இந்திய தொழிலாளர்கள் மகிழ்ச்சியற்ற நிலையில் இருப்பதாகவும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 42 சதவிகித தொழிலாளர்கள் சிறந்த பேக்கேஜ்களுடன் கூடிய புதிய நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று விட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். உலக அளவில் 26 சதவிகிதம் பேரே இந்த மனநிலையில் இருக்கும் நிலையில், இந்தியாவில் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட இருமடங்கு அதிகமாக உள்ளது.












Click it and Unblock the Notifications