இது பூச்சிக்கொல்லிங்க..527 மசாலாக்கள் டேஞ்சர்! சிக்கலில் இந்திய நிறுவனங்கள்.. ஐரோப்பிய யூனியன் அதிரடி
டெல்லி: இந்தியாவில் இருந்து தயாரிக்கப்படும் 527 உணவு மற்றும் மசாலா பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்கள் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ள நிலையில் இந்திய நிறுவனங்களுக்கு உலக அளவில் சிக்கல் முளைத்துள்ளது.
ஏற்கனவே MDH மற்றும் எவரெஸ்ட் உள்ளிட்ட புகழ்பெற்ற இந்திய மசாலா பிராண்டுகள், அனுமதிக்கப்பட்ட அளவை விட எத்திலீன் ஆக்சைடு என்ற ரசாயனத்தைக் கொண்டிருப்பதாக சிங்கப்பூர் ஹாங்காங் அரசுகள் தடை விதித்த நிலையில், தற்போது ஐரோப்பிய யூனியனிலும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.

MDH குழுமத்தின் மூன்று மசாலா கலவைகளில் எத்திலீன் ஆக்சைடு இருப்பதைக் கண்டறிந்ததாக ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிராந்தியத்தின் அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்பு மையம் ஏப்ரல் 5 ஆம் தேதி அறிவித்தது.
இந்திய மசாலா பொருட்கள்: பல முன்னணி நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு இந்திய மசாலா பொருட்களை ஏற்றுமதி செய்கின்றன. சுவை தரம் நிறம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் காரணமாக மேலை நாடுகளில் இந்திய மசாலா பொருட்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் மசாலா பொருட்களில் கிருமி நீக்கம் செய்ய எத்திலின் ஆக்சைடு பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் ஐரோப்பிய யூனியனின் உணவு பாதுகாப்பு ஆணையம் இந்திய மசாலா பொருட்களில் எத்திலின் ஆக்சைட் இருப்பதை கண்டறிந்து எல்லையிலேயே 87 பெட்டகங்களில் இருந்த சரக்குகளை நிராகரித்துள்ளது.
ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு ஆணையம்: மேலும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள சரக்குகளும் விற்பனையில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. தற்போது தடை செய்யப்பட்டுள்ள 527 பொருட்களில் 525 உணவு பொருட்கள் மற்றும் இரண்டு குணங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன இதில் 332 இந்தியாவைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு ஆணையமான EFSA செப்டம்பர் 2020 முதல் ஏப்ரல் 2024 வரை பல்வேறு உணவுப் பொருட்களில் சோதனைகளை நடத்தியது.
அதிரடி நடவடிக்கை: பரிசோதிக்கப்பட்ட தயாரிப்புகளில் பெரும்பாலானவை 313 பருப்பு மற்றும் எள் விதைகள், 60 மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள், 48 உணவுமுறை உணவுகள் மற்றும் 34 பிற இதர உணவுப் பொருட்கள் அடங்கும். இந்த தயாரிப்புகளில் கணிசமான எண்ணிக்கையில் எத்திலீன் ஆக்சைடு இருப்பதை சோதனைகள் உறுதிப்படுத்திய நிலையில் தான் இந்த அதிரடி நடவடிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துள்ளது.
எத்திலீன் ஆக்சைடு: எத்திலீன் ஆக்சைடு என்பது பூச்சிக்கொல்லியாகவும், கிருமி நீக்கம் செய்யும் பொருளாகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் நிறமற்ற வாயு ஆகும். இது முதலில் மருத்துவ சாதனங்களை கிருமி நீக்கம் செய்வதற்கு பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் மசாலாக்களில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் (IARC) எத்திலீன் ஆக்சைடை ஒரு குரூப் 1 புற்றுநோய் காரணியாக வகைப்படுத்துகிறது. இது மனிதர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் என்பதால் முதல் பட்டியலில் உள்ளது. பொதுவாக ஐரோப்பிய யூனியனில் 0.1 mg/kg எத்திலீன் ஆக்சைடுக்கு என்ற வரம்பை நிர்ணயித்துள்ளது.. ஆனால் இந்திய தயாரிப்புகளில் இந்த வரம்பு அதிகமாக உள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.












Click it and Unblock the Notifications