'சனாதன தர்மம் ஒழிப்பு' உதயநிதி பேச்சால் மத உணர்வுகள் புண்பட்டுவிட்டதாம். டெல்லி போலிசில் புகார்!
டெல்லி: சனாதனத்தை ஒழிப்போம் என்ற தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சால் தம்முடைய மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டுவிட்டதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டெல்லி போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி, டெங்கு- மலேரியா போல சனாதன தர்மமும் ஒழிக்கப்பட வேண்டும். சனாதனத்தை வெறுமனே எதிர்க்க கூடாது; ஒழித்து கட்ட வேண்டும் என்றார்.

தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சை கையில் எடுத்துள்ள பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்கள், இந்துக்களை இனப்படுகொலை செய்ய அழைப்பு விடுத்தார் என பொய் பிரசாரம் செய்து வருகின்றன. இதனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக தலைவர்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்து விளக்கம் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி போலீசில் வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் என்பவர் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், சனாதன தர்மத்தை இழிவுபடுத்தும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். சனாதன தர்மத்தை பின்பற்றும் என்னுடைய மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டுவிட்டன. மதத்தின் அடிப்படையில் இரு பிரிவினரிடையே பகைமையை உருவாக்கும் வகையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
ஆனால் எந்த ஒரு சட்டப்படியான நடவடிக்கையையும் எதிர்கொள்ள திமுக தயாராக உள்ளது என அக்கட்சியின் வழக்கறிஞர் சரவணன் அண்ணாதுரை திட்டவட்டமாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications