வாயைப் பிளந்து தூங்கியதால் வந்த வினை.. டெல்லி இளைஞருக்கு நேர்ந்த பகீர் சம்பவம்
டெல்லி: மனிதனுக்கு மிகவும் அத்தியாவசியமானதே சாப்பாடும், தூக்கமும் தான். இந்த இரண்டின் மூலமாக 23 வயதான இளைஞருக்கு நேர்ந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனுசன் நிம்மதியாக இருப்பதே தூங்கும்போது மட்டும்தான் என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். தூக்கம் என்பது மனிதர்களுக்கு அன்றாட அவசியத் தேவையாகும். 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம் என்று கூறுகின்றனர் நிபுணர்கள். நம் உடலின் உறுப்புகள் சீராக இயங்க, நாம் அனைத்து வேலைகளிலும் சுறுசுறுப்பாக இயங்கத் தேவையானது தூக்கம்.

படுத்ததுமே நான் தூங்கிவிடுவேன் என்று சொல்பவர்கள் எல்லோருமே வரம் வாங்கி வந்தவர்கள்தான். சிலருக்கு நாள் முழுவதும் படாத பாடு பட்டு உழைத்து களைத்து வந்தாலும் தூக்கம் வராது. தூக்கம் கெடுவதால் பல உடல் உபாதைகள் ஏற்படும். பல்வேறு பூதாகரமான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். நல்ல தூக்கத்துக்காக பலர் மருத்துவமனை வாசலில் காத்திருப்பதை நாம் கேள்வி பட்டிருப்போம்.
அதுபோலத்தான் சாப்பாடும். நல்ல உணவு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். இந்நிலையில், அசந்து தூங்கியதாலோ அல்லது நன்றாக சாப்பிட்டதாலோ டெல்லி இளைஞருக்கு அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நேர்ந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த இளைஞரின் குடலுக்குள் கரப்பான்பூச்சி உயிரோடு இருந்துள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்தியாவின் தலைநகரான டெல்லியைச் சேர்ந்தவர் 23 வயதான இளைஞர். இவருக்கு கடந்த சில நாட்களாகவே கடும் வயிற்று வலி மற்றும் உணவு செரிமானப் பிரச்னையால் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டுள்ளார். பின்னர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது மேல் இரைப்பை குடலில் எண்டோஸ்கோபி செய்ய பரிந்துரைத்துள்ளனர். அந்தப் பரிசோதனையில் இளைஞரின் சிறுகுடலில் உயிரோடு ஒரு கரப்பான்பூச்சி இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து, உடனடியாக எண்டோஸ்கோபிக் நுட்பங்களைப் பயன்படுத்தி இளைஞரின் குடலில் இருந்து உயிரோடிருந்த கரப்பான் பூச்சி அகற்றப்பட்டது.
இந்த சிகிச்சையை மருத்துவர்கள் 10 நிமிடங்களில் செய்து முடித்துள்ளனர். மேலும், இளைஞரின் வயிற்றில் உயிரோடிருந்த அந்த கரப்பான்பூச்சி 3 சென்டிமீட்டர் அளவில் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வயிற்று வலி ஏற்பட்டவுடன் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் இளைஞர் காப்பாற்றப்பட்டுள்ளார். எண்டோஸ்கோபி மூலம் விரைவாக கரப்பான்பூச்சி குடலில் இருந்து அகற்றப்பட்டது
ஒருசில சமயங்களில் இதுபோன்ற சம்பவங்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். சரியான நேரத்தில் சிகிச்சை வழங்கப்பட்டதால் இளைஞரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இளைஞர் உணவு சாப்பிடும்போது இந்த கரப்பான்பூச்சியை முழுங்கியிருக்கலாம். அல்லது நன்றாக தூங்கிக் கொண்டிருந்த போது இளைஞரின் வாய்க்குள் கரப்பான்பூச்சி நுழைந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications