8 முறை எம்பி கொடிக்குன்னில் சுரேஷ் 'தலித்' என்பதால் தற்காலிக சபாநாயகர் பதவி மறுப்பா? புது சர்ச்சை!
டெல்லி: 18-வது லோக்சபா கூட்டத் தொடரின் தற்காலிக சபாநாயகராக 7முறை எம்பியான ஒடிஷாவின் பர்த் ருஹரி மஹ்தப் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் 8 முறை லோக்சபா எம்பியாக இருக்கும் கேரளாவின் கொடிக்குன்னில் சுரேஷ் அப்பொறுப்புக்கு நியமிக்கப்படாதது தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. நாட்டின் பிரதமராக 3-வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றுள்ளார்.

18-வது லோக்சபாவின் முதல் கூட்டம் ஜூன் 24-ம் தேதி தொடங்கும். முதல் 2 நாட்கள் புதிய எம்பிக்கள் பதவியேற்பர். இதனையடுத்து புதிய லோக்சபா சபாநாயக்கர் தேர்தல் ஜூன் 26-ம் தேதி நடத்தப்படும்.
புதிய லோக்சபா கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர் சபையின் மூத்த உறுப்பினர் ஒருவர் தற்காலிக லோக்சபா சபாநாயகராக நியமிக்கப்படுவதும் அவருக்கு ஜனாதிபதி பதவி பிரமாணம் செய்து வைப்பதும் மரபு. தற்போதைய நிலையில் லோக்சபாவில் 8 முறை எம்பியாக இருக்கும் கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் கொடிக்குன்னில் சுரேஷ்-க்குதான், தற்காலிக சபாநாயகர் வாய்ப்பு என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.
இந்த நிலையில் நேற்று திடீரென பாஜகவைச் சேர்ந்த ஒடிஷாவின் பர்த்ருஹரி மஹ்தப், தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. பர்த் ருஹரி மஹ்தப் 7 முறைதான் எம்பியானவர். அவரை விட சீனியர் கொடிக்குன்னில் சுரேஷ். ஆனால் பாஜகவைச் சேர்ந்தவர் என்பதால் பர்த்ருஹரி மஹ்தப்புக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியும் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரான 8 முறை எம்பியான கொடிக்குன்னில் சுரேஷ்-க்குதான் முறைப்படி தற்காலிக சபாநாயகர் வாய்ப்பு தரப்பட்டிருக்க வேண்டும்; ஆனால் அவருக்கு ஏன் இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது? கொடிக்குன்னில் சுரேஷ் தலித் என்பதால் மத்தியில் ஆளும் பாஜக அரசு வாய்ப்பு தர மறுத்துள்ளதா? என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
கொடிக்குன்னில் சுரேஷ் கருத்து தெரிவிக்கையில், பாஜக நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளை தொடர்ந்து மீறி வருகிறது என கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்க்கட்சிகளை பாஜக திட்டமிட்டு அவமதிக்கிறது எனவும் கொடிக்குன்னில் சுரேஷ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications