தேர்தல் ஆணையர்களை நியமிக்க.. புதிய தேர்தல் ஆணைய சட்டமா? வேண்டவே வேண்டாம்.. உச்சநீதிமன்றத்தில் வழக்கு
டெல்லி: தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்த நிலையில், புதிய ஆணையரை நியமிக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் புதிய தேர்தல் ஆணைய சட்டப்படி ஆணையர்களை நியமிக்க தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஐஎஸ்எஸ் அதிகாரியான அருண் கோயல், கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 2027ம் ஆண்டு முடிவடைய இருந்த நிலையில், திடீரென கடந்த சனிக்கிழமை (மார்ச் 09) தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். இதற்காக அவர் எந்த காரணத்தையும் குறிப்பிடவில்லை. இவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்ட நிலையில், தற்போது தேர்தல் ஆணையம் காலி இடங்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.

இந்த காலி இடங்களை நிரப்ப மத்திய அரசு வரும் 15ம் தேதி ஆலோசனையை நடத்துகிறது. மத்திய சட்ட அமைச்சர் மற்றும் மத்திய அரசின் 2 முதன்மை செயலாளர்கள் புதிய தேர்தல் ஆணையர்களை தேடும் பணியில் இறங்குவார்கள். இவர்கள் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகளின் பின்னணி குறித்து ஆய்வை மேற்கொள்வார்கள். இப்படியாக 5 பேர் கொண்ட பட்டியலை தேர்வு குழுவுக்கு, சட்ட அமைச்சர் தலைமையிலான குழு வழங்கும்.
தேர்வு குழு என்பது 2 மத்திய அமைச்சர்கள், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் என 5 பேர் இருப்பார்கள். இந்த குழுவுக்கு பிரதமர்தான் தலைமை. இந்த குழு 5 பேரில் ஒருவரை தேர்ந்தெடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும். இப்படியாக தேர்வு செய்யப்படும் நபர்தான் தேர்தல் ஆணையராகவும், தலைமை தேர்தல் ஆணையராகவும் நியமிக்கப்படுவார்கள்.
ஆனால், இங்குதான் பிரச்னை இருக்கிறது. தேர்வு குழுவின் தலைவராக பிரதமர் இருந்தால், அவர் சார்ந்திருக்கும் கட்சிக்கு ஆதரவான நபரை தேர்ந்தெடுக்க மாட்டார் என்று என்ன நிச்சயம்? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், "தேர்வு குழு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியையும் உறுப்பினராக கொண்டிருக்க வேண்டும்" என்று கடந்த 2023ம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது. ஆனால், தீர்ப்பை நீர்த்துப்போக செய்யும் விதமாக மத்திய அரசு 'புதிய தேர்தல் ஆணைய' சட்டத்தை இயற்றியது. இந்த சட்டத்தின்படி தேர்வு குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இருக்க வேண்டிய அவசியமில்லை.
அதற்கு பதிலாக மத்திய அமைச்சர் இருந்தால் போதுமானது என்று கூறியிருந்தது. இந்த சட்டத்தை எதிர்த்துதான் தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications