டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை அகற்ற பாஜக சதி.. எம்எல்ஏ கூட்டத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு!
டெல்லி: டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதித்திட்டம் தீட்டி வருவதாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, 2021-22-ம் ஆண்டுக்கான மதுபான கொள்கை வகுத்ததில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக டெல்லி துணைநிலை ஆளுநர் விகே சக்சேனா, சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தார்.

இதனைத்தொடர்ந்து, மணீஷ் சிசோடியா உள்பட 15 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. பின்னர் கடந்த 19ம் தேதி மணீஷ் சிசோடியாவின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 21 இடங்களில் சிபிஐ சோதனையில் ஈடுபட்டது. இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து மணீஷ் சிசோடியா கூறுகையில், தன்னை பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள் தொடர்பு கொண்டதாகவும், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகினால் என் மீதான வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று கூறியதாக குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் டெல்லியில் இலவச மின்சாரங்களை தொடங்கி வைத்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். அதில், கடந்த 2 முதல் 3 நாட்களாக சில ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள் என்னை தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். சிபிஐ மற்றும் அமலாக்க துறை சோதனை நடத்தப்படும் என தொடர்ந்து அவர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் கட்சியை விட்டு விலகும்படியும், அதற்காக பணம் அளிக்கப்படும் என ஆசை வார்த்தைகளும் கூறப்பட்டு வருகின்றன. இதனை எம்எல்ஏ-க்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து கட்சியின் அரசியல் விவகார கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். இதற்காக நாளை எம்எல்ஏ-க்கள் கூட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
குஜராத் தேர்தல் பிரச்சாரத்திற்காக அரவிந்த் கெஜ்ரிவால் மக்களுக்கு மின்சாரம், கல்வி, உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு இலவச அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது பிரதமர் மோடி, இலவசங்கள் வழங்குவோரை கடுமையாக விமர்சித்தார். இதனைத்தொடர்ந்து இலவசங்கள் குறித்த விவாதம் நாட்டில் எழுந்தது.
அதேபோல் அண்மைக் காலமாக ஆம் ஆத்மி கட்சி மீது பாஜகவினரின் குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளன. இதனால் மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியைப் போல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை உடைக்க பாஜக திட்டமிட்டு வருவதாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். பரபரப்பான சூழலில், ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள் கூட்டத்தை அரவிந்த் கெஜ்ரிவால் கூட்டியுள்ள நிலையில், டெல்லி அரசியல் சூடுபிடித்துள்ளது.












Click it and Unblock the Notifications