‛பூர்வாஞ்சல்’.. டெல்லியில் 27 தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் சமுதாயம் இதுதான்! ஆம்ஆத்மி பிளான்
டெல்லி: டெல்லியில் 27 சட்டசபை தொகுதிகளில் வெற்றியை நிர்ணயம் செய்யும் மக்களாக பூர்வாஞ்சல் சமுதாய மக்கள் உள்ளனர். இவர்களின் ஓட்டுகள் யாருக்கு கிடைக்கிறதோ அந்த கட்சி தான் டெல்லி சட்டசபை தேர்தலில் வெல்லும் நிலை உள்ளது. இதனால் பூர்வாஞ்சல் தொகுதி மக்களின் ஓட்டுகளை பெற ஆம்ஆத்மி கட்சி புதிய வியூகத்தை அமைத்து தனிக்குழுக்களை களமிறக்கி உள்ளது.
டெல்லியில் கடந்த 2014, 2015, 2020 ஆகிய சட்டசபை தேர்தல்களில் தொடர்ந்து ஆம்ஆத்மி கட்சி வென்றது. டெல்லியில் மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தற்போது ஒரே கட்டமாக பிப்ரவரி 5ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு பிப்ரவரி 8 ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

டெல்லியில் தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 36 இடங்களில் வெற்றி பெற வேண்டும். தற்போது அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. ஆளும் ஆம்ஆத்மி, எதிர்க்கட்சியான பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் வேட்பாளர்கள், கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லியை பொறுத்தமட்டில் மொத்தம் 27 சட்டசபை தொகுதிகளில் பூர்வாஞ்சல் மக்கள் அதிகம் உள்ளனர். இன்னும் புரியும்படி கூற வேண்டும் என்றால் டெல்லி மக்கள்தொகையில் 25 சதவீதம் முதல் 38 சதவீதம் வரை பூர்வாஞ்சல் சமுதாய மக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் உத்தர பிரசேதம், பீகார், ஜார்கண்ட்டில் இருந்து இடம்பெயர்ந்து டெல்லியில் வசிக்கின்றனர். இதனால் டெல்லியில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்றால் பூர்வாஞ்சல் சமுதாய மக்களின் ஓட்டுகளை பெறுவது மிகவும் முக்கியமாகும்.
இதற்கிடையே தான் டெல்லி சட்டசபை தேர்தலில் பூர்வாஞ்சல் சமுதாய மக்களின் ஓட்டுகளை பெற ஆம்ஆத்மி கட்சி தனியாக குழு அமைத்துள்ளது. மொத்தம் 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் சிங் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் பணி என்பது பூர்வாஞ்சல் சமுதாய மக்களின் ஓட்டுகளை ஆம்ஆத்மி கட்சிக்கு பெற்று கொடுக்க வேண்டும் என்பதாகும்.
இதற்காக இந்த குழுவினர் பூர்வாஞ்சல் சமுதாய மக்களுடன் தொடர்பில் இருக்க தொடங்கி உள்ளனர். டெல்லியில் சுமார் 20 சட்டசபை தொகுதிகளில் பூர்வாஞ்சல் மக்களின் ஓட்டுகள் தான் வெற்றியை நிர்ணயிக்கும் வகையில் உள்ளன. இந்த 20 தொகுதிகளிலும் முகாமிட்டு பணியை தொடங்கி உள்ளது இந்த ஆம்ஆத்மி கட்சியின் குழுவினர்.
இந்த குழுவினர் சமுதாய மக்களுக்கு எதிராக பாஜக எப்படி செயல்பட்டு வருகிறது என்பதை ஆம்ஆத்மி கட்சி தலைவர்கள் எடுத்துரைத்து வருகின்றனர். அதோடு சஞ்சய் சிங் தொடர்ந்து பூர்வாஞ்சல் சமுதாய மக்களுடன் மீட்டிங்கை நடத்தி வருகிறார். தற்போது வரை ஆம்ஆத்மி சார்பில் மொத்தம் 600 மீட்டிங் வரை நடத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் தொலைக்காட்சி விவாதத்தில் ஜாதியின் பெயரை பெயருக்கு பின்னால் போடுவது தொடர்பாக பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஷாத் பூனவல்லா மற்றும் ஆம்ஆத்மி செய்தி தொடர்பாளர் ரிதுராஜ் ஷா ஆகியோர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பாஜக செய்தி தொடர்பாளர் பூனவல்லா கூறிய கருத்து பூர்வாஞ்சல் சமுதாயத்தை இழிவுப்படுத்தும் வகையில் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதனை அந்த மக்களிடம் கூறி பாஜகவுக்கு எதிராக பிரசாரம் செய்யும் பணியை ஆம்ஆத்மி தொடங்கி உள்ளது.
ஆம்ஆத்மி கட்சியின் இந்த நடவடிக்கைக்கு போட்டியாக பாஜகவும் தலைவர்களை களமிறக்கி உள்ளது. பூர்வாஞ்சல் மக்கள் என்பவர்கள் உத்தர பிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள். இதனால் பீகார், உத்தர பிரதேசத்தில் இருந்து 100 தலைவர்களை பாஜக களமிறக்கி உள்ளது. பாஜகவினர் இந்த தலைவர்களை முன்னாள் எம்பியும், அசாம் மாநில பாஜக பொறுப்பாளருமான ஹரீஸ் திரிவேதி ஒருங்கிணைத்து வருகிறார்.
டெல்லி சட்டசபை தேர்தலை எடுத்து கொண்டால் 70 தொகுதிகளில் கடந்த 2015ம் ஆண்டு ஆம்ஆத்மி கட்சி 67 இடங்களை பிடித்து வென்றது. பாஜக 3 இடங்களை கைப்பற்றிய நிலையில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. அதன்பிறகு 2020ல் ஆம்ஆத்மி 63 தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைத்தது. பாஜக 7 இடங்களில் ஜெயித்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் வெல்லவில்லை. இந்த முறையும் டெல்லியில் மும்முனை போட்டி நிலவினாலும் கூட ஆம்ஆத்மி, பாஜக இடையே தான் கடும் போட்டி உள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலாவது வெல்லுமா? என்ற நிலை தான் அங்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications