"விரிசல்.." ஆம் ஆத்மி vs காங்கிரஸ்.. திடீரென வெடித்த மோதல்.. "இந்தியா" கூட்டணியில் குழப்பம்?
டெல்லி: பல்வேறு எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி இருக்கும் நிலையில், இப்போது அந்தக் கூட்டணியில் திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் இருந்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பதை பல்வேறு தரப்பினரும் கடந்த சில ஆண்டுகளாகவே வலியுறுத்தி வந்தனர். இது இப்போது தான் ஒரு வழியாக அமைந்து வருகிறது.

20+ எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து "இந்தியா" கூட்டணியை உண்டாக்கியுள்ளனர். இதில் எதிரும் புதிருமாக இருந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளும் இணைந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
டெல்லி கூட்டணி: கூட்டணி உருவாகி சில மாதங்கள் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில், கூட்டணியில் மீண்டும் ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்த நிலையில், அதில் டெல்லியில் உள்ள ஏழு லோக்சபா தொகுதிகளிலும் போட்டியிடத் தயாராகுமாறு காங்கிரஸ் தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வந்ததாகத் தகவல் வெளியானது. இது இந்தியா கூட்டணியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கு அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களுடன் மூன்று மணி நேர மீட்டிங்கை நடத்தினர்.. இதில் அவர்கள் 2024 லோக்சபா தேர்தல் திட்டம் குறித்தே முக்கியமாக ஆலோசித்துள்ளனர். இந்தக் கூட்டத்தில் டெல்லியில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடத் தயாராகுமாறு தலைமை அறிவுறுத்தியதாக அக்கட்சியின் அல்கா லம்பா தெரிவித்தார்.
சர்ச்சை கருத்து: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "2024 தேர்தலுக்கு எப்படி தயாராக வேண்டும் என விளக்கினார்கள்.. டெல்லி கூட்டத்திற்கு முன்பு 18 மாநில தலைவர்களுடன் கூட்டத்தை நடத்தினர்.. இப்போது முதலே தேர்தல் பணிகளைத் தொடங்கச் சொன்னார்கள்.. டெல்லியில் இருக்கும் அனைத்து 7 தொகுதிகளிலும் போட்டியிட ரெடியாக சொன்னார்கள்.. தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்கள் இருக்கும் நிலையில், டெல்லியில் இருக்கும் அனைத்து தொகுதிகளிலும் கட்சி பணிகளைத் தொடங்க உள்ளோம்" என்றார்.
டெல்லியில் இப்போது ஆம் ஆத்மி ஆட்சியில் இருக்கிறது. காங்கிரஸ், ஆம் ஆத்மி என இரு கட்சிகளும் இப்போது இந்தியா கூட்டணியில் இருக்கும் நிலையில், ஆம் ஆத்மி வலுவாக உள்ள டெல்லியில் காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் போட்டியிட முடிவெடுத்துள்ளதாக வெளியான இந்த தகவல் ஆம் ஆத்மிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
பதிலடி: டெல்லியைப் பொறுத்தவரை இப்போது ஆம் ஆத்மி அங்கு ஆட்சியில் இருக்கும் நிலையில், அங்கு யார் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பதை கெஜ்ரிவால் தான் முடிவு செய்வார் என்று ஆம் ஆத்மி பதிலடி கொடுத்துள்ளது. இதனிடையே இது குறித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் தீபக் பபாரியா விளக்கமளித்துள்ளார்.
விளக்கம்: இது குறித்து அவர் கூறுகையில், "அது லம்பாவின் தனிப்பட்ட கருத்து.. சீட் பகிர்வு குறித்து இந்த மீட்டிங்கில் எதுவும் ஆலோசிக்கப்படவில்லை.. டெல்லியில் கட்சியை எப்படி வலுப்படுத்த வேண்டும். அதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து மட்டுமே இன்று விவாதித்தோம்" என்று அவர் தெரிவித்தார். இதன் மூலம் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும், ஆம் ஆத்மியுடன் கைகோர்த்ததற்கு டெல்லி காங்கிரஸில் ஒரு தரப்பினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியில் இருக்கும் போதிலும் கடந்த 2019ஆம் ஆண்டு ஆங்கு நடந்த லோக்சபா தேர்தலில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளையும் பாஜகவே கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
ஆம் ஆத்மி: மேலும், இந்தாண்டு இறுதியில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் தேர்தல் நடக்கும் நிலையில், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் வரும் ஆகஸ்ட் 19, 20 தேதிகளில் அங்குப் பிரசாரத்திற்குச் செல்கிறார்கள். மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் மிகவும் வலுவாக இருக்கிறது. அதேபோல சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications