வரும் கூட்டங்களில் பங்கேற்க மாட்டோம்! எதிர்க்கட்சி கூட்டம் முடிந்த மறுநொடி ஆம் ஆத்மி பரபர! என்னாச்சு
டெல்லி: பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்து முடிந்த சில நொடிகளில், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஆம் ஆத்மி பரபர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், இதை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து எதிர்கொள்ள வேண்டும் என பலரும் வலியுறுத்துகிறார்கள். அதன்படி பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். இதற்காகவே அவர் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று, எதிர்க்கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார்.

கெஜ்ரிவால்: அதன்படி, பீகார் தலைநகர் பாட்னாவில் இன்று எதிர்க்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் 16 கட்சிகள் கலந்து கொண்டன. டெல்லி அவசர சட்டத்திற்குக் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றில் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என ஆம் ஆத்மி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது. இருப்பினும், இன்று திடீரென முடிவை மாற்றிய கெஜ்ரிவால் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இதற்கிடையே கூட்டத்திற்குப் பிறகு, அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இருப்பினும், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. இதற்கிடையே கூட்டம் முடிந்த சில நொடிகளில் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் பகிரங்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. காங்கிரஸை சாடியுள்ள ஆம் ஆத்மி, வரும் காலத்தில் எதிர்க்கட்சி கூட்டங்களில் பங்கேற்க மாட்டோம் என்று எச்சரித்துள்ளது.
ஆம் ஆத்மி: டெல்லியில் அதிகாரிகளை நியமிப்பது குறித்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டம் தொடர்பான விவகாரத்தில் காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என ஆம் ஆத்மி வலியுறுத்தியது. இருப்பினும், காங்கிரஸ் இதில் மவுனமாகவே இருந்து வந்தது. இந்தச் சூழலில் தான் எதிர்க்கட்சிகள் கூட்டம் முடிந்தவுடன் காங்கிரஸை சாடி ஆம் ஆத்மி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஆம் ஆத்மி வெளியிட்டுள்ள அறிக்கையில், " எதிர்க்கட்சிகள் ஆலோசனைக்குப் பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஆம் ஆத்மி பங்கேற்கவில்லை.. மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக 11 கட்சிகள் குரல் கொடுத்துள்ளன.. காங்கிரஸ் கட்சி மட்டும் இந்த விவகாரத்தில் எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை..
பங்கேற்க மாட்டோம்: காங்கிரஸின் மவுனம் அதன் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.. அனைத்து பிரச்சினைகளிலும் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் காங்கிரஸ், இதில் மவுனமாக இருப்பது ஏன்" என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார், மேலும், அவசர சட்டத்தைக் காங்கிரஸ் எதிர்க்கவில்லை என்றால் இனி வரும் கூட்டங்களில் கலந்து கொள்ள மாட்டோம் என்றும் ஆம் ஆத்மி எச்சரித்துள்ளது.
காங்கிரஸ் இந்த விவகாரத்தில் அமைதியாக இருப்பது சந்தேகத்தைக் கிளப்புவதாகத் தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கார், காங்கிரஸ்- பாஜக இடையே ஒருமித்த கருத்து இருப்பதாலேயே இந்தச் சட்டத்தை அவர்கள் எதிர்க்கவில்லை எனச் சந்தேகமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால் வரும் காலத்தில் ஆலோசனைக் கூட்டங்களில் கலந்து கொள்ள மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி கூட்டத்திற்குப் பிறகு, கூட்டாக அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் இருப்பதாகவும் அடுத்த தேர்தலை ஒன்றாக எதிர்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், அடுத்த கூட்டம் சிம்லாவில் அடுத்த மாதம் நடைபெறும் என அறிவித்தனர். இந்தச் சூழலில் தான் ஆம் ஆத்மி மிரட்டும் வகையில் இப்படியொரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications