அதானி போர்ட்ஸ் அதிரடி: இந்தியாவின் முதல் 'பாதுகாப்பு புகலிடத் துறைமுகங்கள்' தயார்!
டெல்லி: அதானி போர்ட்ஸ் நிறுவனம் இந்தியாவின் முதல் 'போர்ட் ஆஃப் ரெப்யூஜ்' எனப்படும் அவசர கால அடைக்கலத் துறைமுக சேவையைத் தொடங்கியுள்ளது. இது இந்திய கடல்சார் பாதுகாப்பில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
'போர்ட் ஆஃப் ரெப்யூஜ்' என்றால் என்ன?
கடலில் பயணம் செய்யும் கப்பல்கள் தீ விபத்து, இயந்திரக் கோளாறு, இயற்கை சீற்றம் அல்லது மூழ்கும் அபாயம் போன்ற அவசர நிலைகளைச் சந்திக்கும் போது, அந்தப் பாதிப்புகளைக் குறைக்கவும், ஊழியர்களின் உயிரைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்கவும் தஞ்சம் புகும் ஒரு பாதுகாப்பான இடமே 'போர்ட் ஆஃப் ரெப்யூஜ்'.

எங்கு அமைய உள்ளது?
இந்தியா முழுவதும் இரு கடற்கரை பகுதிகளிலும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரபிக்கடல் மற்றும் பாரசீக வளைகுடா செல்லும் கப்பல்களுக்காக மகாராஷ்டிராவின் திகி துறைமுகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வங்காள விரிகுடா மற்றும் மலாக்கா ஜலசந்தி செல்லும் கப்பல்களுக்காக ஒடிசாவின் கோபால்பூர் துறைமுகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச உறவு
அதானி நிறுவனம் நெதர்லாந்தைச் சேர்ந்த உலகப்புகழ் பெற்ற SMIT Salvage மற்றும் MERC ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்தச் சேவையை வழங்குகிறது. இதன் மூலம் சர்வதேச தரத்திலான தீயணைப்பு உபகரணங்கள், எண்ணெய் கசிவைக் கட்டுப்படுத்தும் கருவிகள் மற்றும் மீட்புப் பணிகளுக்கான நவீனக் கப்பல்கள் பயன்படுத்தப்படும்.
ரொம்பவும் முக்கியமான ஒன்று
இந்தியாவின் 11,000 கி.மீ நீளமுள்ள கடற்கரையில் இதுவரை இதுபோன்ற அதிகாரப்பூர்வமான அவசரக்கால தஞ்சம் புகும் கட்டமைப்பு இல்லை. கடலில் கப்பல்கள் விபத்துக்குள்ளாகும் போது கடலோர சூழலியல் பாதிக்கப்படாமல் இது தடுக்கும். கப்பல் ஊழியர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும்.
“இது இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பில் ஒரு பெரிய முன்னேற்றம்,” என APSEZ தலைமை நிர்வாக அதிகாரி அஷ்வனி குப்தா கூறினார். துறைமுகங்கள் பொருளாதாரங்களை இணைப்பதுடன், வாழ்க்கையையும், சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மீட்பு நடவடிக்கைகளில் பாதுகாப்புத் துறைமுகம் மிகவும் முக்கியம், என்று SMIT சால்வேஜ் நிர்வாக இயக்குநர் ரிச்சர்ட் ஜேன்சன் குறிப்பிட்டுள்ளார். இது கப்பல்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் கையாள உதவும். மேலும், ஆபத்தான பொருட்கள் மற்றும் தீயணைப்பு எச்சங்களை சுற்றுச்சூழல் இணக்கத்தோடு நிர்வகிக்கவும் வழிவகுக்கும்.












Click it and Unblock the Notifications