570 மெகாவாட் புனல் மின்சாரம்.. பூடானில் மிக முக்கிய ஒப்பந்தத்தை கையெழுத்திட்ட அதானி பவர்!
டெல்லி: இந்தியாவின் முன்னணி மின்சார உற்பத்தி நிறுவனமான அதானி பவர் மற்றும் பூடான் அரசின் மின் உற்பத்தி நிறுவனமான ட்ரக் கிரீன் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (DGPC) ஆகியவை இணைந்து பூடானின் இமயமலைப் பகுதியில் 570 மெகாவாட் வாங்சூ நீர்மின் திட்டத்தை அமைக்கும் முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம் இரு தரப்புக்கும் இடையிலான ஒத்துழைப்பை உறுதி செய்கிறது.
இந்தத் திட்டத்திற்கான மின் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான ஆரம்பக்கட்டப் புரிதல் ஒப்பந்தமும் எட்டப்பட்டது. மேலும், பூடான் அரசும் சலுகை ஒப்பந்தத்தில் (CA) கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தங்கள், பூடான் பிரதமர் டாஷோ ஷெரிங் டோப்கே மற்றும் அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி ஆகியோர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

முக்கிய ஒப்பந்தம்
இந்த ஒப்பந்தங்கள் வாங்சூ நீர்மின் திட்டத்தை அமைப்பது, செயல்படுத்துவது உள்ளிட்ட அதிகாரங்களை அதானி பவர் மற்றும் DGPC நிறுவனங்களுக்கு அளிக்கிறது. பூடானின் எனர்ஜி பாதுகாப்பை மேம்படுத்துவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாக இந்தத் திட்டம் கொண்டுள்ளது.
வாங்சூ திட்டத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் நிலையம் மற்றும் அதனுடன் தொடர்புடைய உள்கட்டமைப்புகளுக்காகச் சுமார் ₹60 பில்லியன் முதலீடு செய்யப்படவுள்ளது. திட்ட அறிக்கை ஏற்கனவே தயாராகியுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகளை 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் தொடங்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
திட்டம் என்ன
இது தொடர்பாக அதானி பவரின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.பி. கயாலியா கூறுகையில், "பூடான் நாடு தான் நிலையான வளர்ச்சிக்கு உலகிற்கே ஒரு முன்மாதிரியாக இருக்கிறது. இந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தின் மூலம் அந்நாட்டின் இயற்கை வளங்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பூடானின் குளிர்காலத்தில் மின்தேவை உச்சத்தை எட்டும். அந்தத் தேவையை வாங்சூ நீர்மின் திட்டம் பூர்த்தி செய்யும். கோடையில் மின் தேவை குறைவாக இருக்கும்போது, இந்த மின்சாரம் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும்" என்றார்.
இரு நாட்டு உறவு
இது குறித்து DGPC நிர்வாக இயக்குநர் டாஷோ சேவாங் ரின்சின் பேசுகையில், "1960கள் முதலே பூடான் மற்றும் இந்தியா அதன் நீர்மின் ஆற்றல் திறனைப் பயன்படுத்த நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றன. இந்த ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் பெரும் பலன்களை அளித்துள்ளது. அடுத்த பத்தாண்டுகளில் பூடான் உயர் வருவாய் ஜிஎன்ஹெச் (Gross National Happiness) நாடாக மாற, நம்பகமான மற்றும் குறைந்த விலை மின்சாரம் அவசியம். எனவே, 2040க்குள் கூடுதலாக 15,000 மெகாவாட் நீர்மின்சாரத்தையும், 5,000 மெகாவாட் சூரிய மின்சக்தியையும் சேர்க்க பூடான் திட்டமிட்டுள்ளது.
முன்மாதிரி திட்டம்
570 மெகாவாட் வாங்சூ நீர்மின் திட்டத்தை அமைப்பதற்கு அதானி குழுமத்துடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். அதானி குழுமத்தின் தொழில்நுட்ப மற்றும் நிதி வலிமை மற்றும் அனுபவம் காரணமாக இத்திட்டம் விரைவாகச் செயல்படுத்தப்பட்டு, மற்ற திட்டங்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமையும். இத்திட்டம் பூடானின் எனர்ஜி பாதுகாப்பை உறுதி செய்வதுடன், பூடான் மற்றும் இந்தியாவிற்கு இடையேயான கட்டமைப்பு இணைப்பை மேலும் வலுப்படுத்தும்" என்றார்.
மே 2025ல் அதானி குழுமத்திற்கும் DGPC-க்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், பூடானில் 5,000 மெகாவாட் நீர்மின் திட்டங்களைக் கூட்டாக உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அதன் முதல் படிதான் வாங்சூ திட்டமாகும். மேலும், எதிர்காலத் திட்டங்களுக்கான விவாதங்களிலும் அதானி குழுமமும் DGPC-யும் ஈடுபட்டுள்ளன.












Click it and Unblock the Notifications