எவ்வளவு நேரம் வாதாடுவீர்கள்? நேரத்தை முன்கூட்டியே வழக்கறிஞர்கள் தெரிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: உச்சநீதிமன்றத்தில் வாதாடும் வழக்கறிஞர்களுக்கு அதிரடியான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர்கள் தாங்கள் வாதாட எடுத்துக்கொள்ளும் நேரத்தை ஒருநாளுக்கு முன்னதாகவே தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டின் உச்சபட்ச அதிகாரம் படைத்த நீதிமன்றம் என்றால் அது உச்சநீதிமன்றம் தான். மாவட்ட நீதிமன்றங்கள், உயர்நீதிமன்ற உத்தரவுகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். அதேபோல் பொதுநலன் சார்ந்த உள்பட பிற வழக்குகளை உச்சநீதிமன்றத்தில் தொடரலாம்.

இங்கு வழங்கப்படும் தீர்ப்பு தான் இறுதி தீர்ப்பாகும். இந்நிலையில் தான் உச்சநீதிமன்றம் சார்பில் புதிய Standared Operating Procedure வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் உத்தரவின்படி வழக்கறிஞர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மூத்த வழக்கறிஞர்கள், வாதிடும் வழக்கறிஞர்கள் வழக்கமான விசாரணை என அனைத்து விவகாரங்களிலும், தங்களது வாய்மொழி வாதங்களை முன்வைப்பதற்கான கால அளவை விசாரணை தொடங்குவதற்கு முன் தெரிவிக்க வேண்டும். ஒவ்வொருவரும் எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள் என்பதை வழக்கு விசாரணைக்கு ஒரு நாள் முன்பே தெரிவிக்க வேண்டும். நீதிமன்றத்தின் ஆன்லைன் ஆஜராதல் சீட்டு போர்டல் வழியாக இதுபற்றி விவரத்தை வழங்க வேண்டும்.
அனைத்து வழக்கறிஞர்களும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை கண்டிப்பாக கடைபிடித்து தங்கள் வாதங்களை முடிக்க வேண்டும். இது நீதிமன்ற அமர்வு நடவடிக்கைகளை சிறப்பாக திட்டமிடவும், ஒவ்வொரு நாளும் அதிகமான வழக்குகளை விசாரிக்கவும் உதவும். அதுமட்டுமின்றி நீதித்துறையின் வேகத்தை அதிகரித்து முறையான நீதித்துறை நிர்வாகத்துக்கு வழிக்காட்டும்.
மேலும் எழுத்துப்பூர்வ பதில்கள் சமர்ப்பிப்பை, திட்டமிடப்பட்ட விசாரணை தேதிக்கு குறைந்தது மூன்று நாட்களுக்கு முன்னதாக தாக்கல் செய்ய வேண்டும்.எதிர் தரப்பினருக்கு முன்கூட்டியே வழங்கப்பட வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications