"ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறை!" 12 ஆண்டுகளுக்கு பின் 2ஜி வழக்கின் தீர்ப்பில்.. மத்திய அரசு மேல்முறையீடு
டெல்லி: 2ஜி அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பு வந்து சுமார் 12 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அப்போது நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் மாற்றம் செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்ததுள்ளது.
நமது நாட்டில் டெலிகாம் துறை தான் ரொம்பவே முக்கியமான ஒன்றாகும். மொபைலில் நாம் பேச, இணைய வசதியை பயன்படுத்த ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றை முக்கியமானது. இதை மத்திய அரசு தான் டெலிகாம் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்து வருகிறது.

அதன்படி முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கீடு செய்ததில் மிக பெரிய ஊழல் நடந்ததாகவும் அதில் 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டதாகவும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
2ஜி வழக்கு: இந்த 2ஜி தொடர்பான வழக்கில் கடந்த 2012ஆம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போதைய யுபிஏ அரசு பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கிய 2G ஸ்பெக்ட்ரம் உரிமத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், அப்போது நீதிமன்றம் தனது தீர்ப்பில், "இயற்கை வளங்களை பயன்படுத்த அனுமதிக்கும் போது அதற்கு உரிய விளம்பரம் கொடுத்து ஏல முறையை கடைப்பிடிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. அப்போது தான் தகுதியான அனைத்து நபர்களும் ஏல செயல்பாட்டில் பங்கேற்க முடியும்" என்று அதில் கூறப்பட்டு இருந்தது.
மனு தாக்கல்: இதற்கிடையே நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசு சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், அரசு தேவைகள் அல்லது பொதுநலன் ஆகியவை காரணமாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யும்போது தொழில்நுட்ப மற்றும் பொருளாதார காரணங்களால் ஏல முறைக்கு முன்னுரிமை அளிக்கப்படாமல் நிர்வாக செயல்முறை பின்பற்றி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்படும் வகையில் தீர்ப்பை மாற்றியமைக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
2ஜி ஊழல் புகார் என்ன: யுபிஏ அரசு ஆட்சியில் இருந்த போது நாட்டை மிக பெரியளவில் உலுக்கிய ஊழல் புகார் என்றால் அது 2ஜி அலைக்கற்றை தான். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யும் போது ஏல முறைக்கு பதிலாக முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற விதியை பயன்படுத்தினர் என்றும் இதன் மூலம் அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது என்பதே புகாராகும்.
மன்மோகன் சிங் அரசில் அப்போது அமைச்சராக இருந்த கபில் சிபல், 2011இல் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் 2ஜி உரிமங்களை வழங்கப்பட்ட போது இதில் அரசுக்கு எந்தவொரு இழப்பும் ஏற்படவில்லை என்றும் கூறியிருந்தார். இருப்பினும், இந்த ஊழல் புகார் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்தது.
விடுவிப்பு: இந்த வழக்கில் தான் திமுக முக்கிய தலைவர்களான ஆ. ராசா, கனிமொழி மற்றும் முன்னாள் தொலைத்தொடர்புத் துறைச் செயலாளர் சித்தார்த் பெஹுரா ஆகியோரும் கூட கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.. இருப்பினும், இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து கடந்த 2017இல் டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி சைனி தீர்ப்பளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications