எரிமலை சாம்பலால் இருண்ட டெல்லி.. அதே நாளில் நடந்த மற்றொரு அதிர்ச்சி சம்பவம்.. திணறிய பொதுமக்கள்!
டெல்லி: கடந்த சில நாட்களாகவே டெல்லியில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி சம்பவங்கள் நடந்து வருகிறது. முதலில் டெல்லியில் காற்று மாசு உச்சம் தொட்ட நிலையில், அடுத்து எத்தியோப்பிய எரிமலை சாம்பல் தாக்கியது. இந்தச் சூழலில் அங்கு இன்னொரு அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக மோசமான சம்பவங்களே நடந்து வருகிறது. முதலில் டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமான நிலையை அடைந்தது. அதைச் சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் எத்தியோப்பிய எரிமலை சாம்பலும் டெல்லியைத் தாக்கியது.

எரிமலை சாம்பல்
அதாவது ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியாவின் வடக்கு பகுதியில் ஹெய்லி குப்பி எரிமலை திடீரென வெடித்துச் சிதறியது. அந்த எரிமலை சுமார் 12,000 ஆண்டுகள் பிறகு வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மிகப் பெரியளவில் சாம்பல் புகை கிளம்பியது. அவை அடர்த்தியாக இருந்ததால் சாம்பல் மேகங்கள் போலவே உருவானது.
அந்த சாம்பல் மேகங்கள் செங்கடல் வழியாக ஏமன், ஓமன் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் பரவியது. ராஜஸ்தான், குஜராத், ஹரியானா வழியாக டெல்லிக்கும் சென்றது. இவை வானத்தில் பல கிமீ சென்றதால் டெல்லியில் காற்றின் தரம் இதனால் பாதிக்கப்படவில்லை. இருப்பினும், அவை அடர்த்தியான மேகங்களால் உருவாகி இருந்ததால் டெல்லி வழக்கத்தை விட இருள் சூழ்ந்ததாக இருந்தது. இதனால் டெல்லி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் இருந்தே டெல்லிவாசிகள் மீளும் முன்பே அங்கு மற்றொரு ஷாக் சம்பவம் நடந்தது.
அடுத்த ஷாக்
அதாவது டெல்லியில் அவுட்டர் ரிங் சாலையில் மிகப் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. அங்கு ஓஆர்ஆர் சாலையில் ஹைதர்பூர் அருகே அமைந்துள்ள முக்கிய மேம்பாலம் ஒன்றில் பெரிய விரிசல் ஏற்பட்டது. ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இந்தச் சம்பவங்களால் டெல்லி மக்கள் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
புகழ்பெற்ற முகர்பா சௌக் கிரேடு செப்பரேட்டரின் ஒரு பகுதியில் அமைந்துள்ள இந்த மேம்பாலம், 2009 மார்ச் மாதம் முதல் பயன்பாட்டில் உள்ளது. இந்த மேம்பாலத்தை 195 கோடி ரூபாய் செலவில் டெல்லி பொதுப்பணித் துறை கட்டியது. ஜி.டி. கர்னால் சாலைக்கும் அவுட்டர் ரிங் ரோடுக்கும் இடையே போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயணத்தை எளிதாக்குவதே இதன் நோக்கமாகும். இந்த மேம்பாலத்தைப் பல ஆயிரம் வாகனங்கள் பயன்படுத்துகின்றன.

முக்கிய மேம்பாலம்
அந்த பகுதியில் டிராபிக் பாதிப்பைக் குறைக்க முக்கிய காரணமாக இருந்ததே இந்த மேம்பாலம் தான். சமீபத்தில் சாலை மேம்பாடு மற்றும் அழகுபடுத்தும் திட்டத்தில் கூட இந்த மேம்பாலம் சேர்க்கப்பட்டது. இந்தளவுக்கு முக்கியமானதாக இருக்கும் மேம்பாலத்தில் திடீரென ஏற்பட்டுள்ள விரிசல் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பல்வேறு வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகிறது. அதில் ஹைதர்பூர் மேம்பாலத்தில் சாலையின் பாதிக்கும் மேல் விரிசல் ஏற்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது. அங்கு வாகனங்கள் செல்ல மிகக் குறைவான இடமே உள்ளது. அப்படி செல்வதும் கூட பாதுகாப்பானது இல்லை என்றே நெட்டிசன்கள் கூறுகிறார்கள். இதனால் அங்கு நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் காத்திருப்பதும் தெரிகிறது.
நெட்டிசன்கள்
நெட்டிசன்கள் இது தொடர்பாக பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். இந்த சாலையை விரைந்து சரி செய்ய வேண்டும் என்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் ட்வீட் செய்துள்ளனர். இன்னும் சிலர் நாட்டின் தலைநகரிலேயே இந்த நிலையை என்றால் மற்ற பகுதிகள் குறித்து யோசித்துப் பாருங்கள் என பதிவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications