கென்யாவை தொடர்ந்து இலங்கை? அதானி குழுமத்தின் காற்றாலை மின் திட்டத்தை ரத்து செய்யும் ஜனாதிபதி அனுர?
டெல்லி: இந்திய தொழிலதிபர் அதானிக்கு எதிரான லஞ்சம் கொடுத்ததை மறைத்த வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில் அதானி குழுமத்தின் திட்டங்களை கென்யா அதிரடியாக ரத்து செய்தது. இந்த வரிசையில் இலங்கையில் சர்ச்சைக்குரிய அதானி குழுமத்தின் மன்னார் காற்றாலைத் திட்டத்தை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க எந்த நேரத்திலும் ரத்து செய்யக் கூடும் என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவின் ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிஷா. சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களின் மின்சார வாரிய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சூரிய ஒளி மின்சக்தி பெற்றுத் தரக் கூடிய மத்திய அரசின் SECI நிறுவனத்துடன் ஒப்பந்தங்கள் செய்ய வைத்தார் அதானி; இந்த லஞ்ச விவகாரத்தை மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடம் ரூ20,000 கோடி முதலீடு பெற்றார் அதானி என்பது அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கு. இந்த வழக்கில் அதானி உள்ளிட்டோருக்கு நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

கென்யா அதிரடி: அதானிக்கு எதிரான அமெரிக்காவின் பிடிவாரண்ட் இந்தியாவிலும் சர்வதேச நாடுகளிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதானி குழுமத்திடம் நைரோபி விமான நிலையம் மற்றும் எரிசக்தித் திட்டங்களை வழங்கியதால் உள்நாட்டில் கடும் எதிர்ப்புகளை எதிர்கொண்ட கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ இந்த இரு ஒப்பந்தங்களை அதிரடியாக ரத்து செய்வதாக நேற்று அறிவித்தார். அதானி குழுமத்துக்கு எதிராக கென்யா மக்கள் உக்கிரமான போராட்டம் நடத்தினர்; நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு அதானி குழுமத்துடனான ஒப்பந்தங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி அதானி குழுமத்துடனான ஒப்பந்தங்களை கென்யா அதிபர் ரத்தே செய்துவிட்டார்.
இலங்கை காற்றாலை மின் திட்டம்: கென்யாவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, இலங்கை, மியான்மர், வங்கதேச நாடுகளும் அதானி குழுமத்துடனான ஒப்பந்தங்களை ரத்து செய்யக் கூடும் என தெரிகிறது. குறிப்பாக இலங்கையில் அதானி குழுமம் மன்னார் காற்றாலைத் திட்டத்தை கடும் சர்ச்சைகளுக்கு இடையே பெற்றிருந்தது. இந்தியாவின் தென் எல்லைப் பகுதியான ராமேஸ்வரம் அருகே உள்ள மன்னார் தீவுகளில்தான் இந்த மெகா காற்றாலை மின்சார உற்பத்தித் திட்டம் அமைந்துள்ளது. முதலில் இந்த திட்டத்தை அதானி குழுமத்துக்கு பெறுவதற்காக இந்திய அரசு தீவிரம் காட்டியது. ஆனால் இலங்கை அரசோ சீனாவிடம் தாரை வார்த்துக் கொடுத்தது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவிக்க மீண்டும் இந்தியாவின் அதானி குழுமத்துக்கு மன்னார் காற்றாலைத் திட்டத்தை அப்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே வழங்கினார்.
அதானிக்காக அழுத்தம் தந்த மோடி: ஆனால், கோத்தபாய ராஜபக்சேவுக்கு அதானிக்காக பிரதமர் நரேந்திர மோடி கடும் அழுத்தம் தந்தார் என இலங்கை நாடாளுமன்றத்திலேயே அந்நாட்டு மின்சார வாரியத்தின் தலைவர் பெர்டினாண்டோ பகிரங்கமாக குற்றம்சாட்டினார். பின்னர் இதனை கோத்தபாய ராஜபக்சேவும் ஒப்புக் கொண்டார்.
அனுர குமார சபதம்: மேலும் இலங்கை ஜனாதிபதி தேர்தலிலும் அதானி குழுமத்தின் மன்னார் காற்றாலைத் திட்டம் பேசுபொருளாகி இருந்தது. தற்போது ஜனாதிபதியாகி இருக்கும் அனுர குமார திசநாயக்க, ஒரு பேரினவாத இடதுசாரி; சீனா சார்புடையவர். தாம் நாட்டின் ஜனாதிபதியானால் அதானி குழுமத்தின் காற்றாலை மின் திட்டத்தை ரத்து செய்தே தீருவேன் என தேர்தல் களத்தில் வாக்குறுதி தந்திருந்தார்.
எந்த நேரத்திலும் அதானி ஒப்பந்தம் ரத்து?: தற்போது இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்து அனுர குமார திசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி அணி மிகப் பெரும்பான்மை பலத்துடன் இருக்கிறது. இதனால் அமெரிக்காவின் பிடியாணை, கென்யாவின் ஒப்பந்தங்கள் ரத்து சர்ச்சைகளுக்கு நடுவே அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட மன்னார் காற்றாலைத் திட்டத்தை இலங்கை அரசு எந்த நேரத்திலும் அதிரடியாக ரத்து செய்ய வாய்ப்பிருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications