அக்னி பாத் ராணுவ வீரர்களுக்கான வயது வரம்பு 23 ஆக உயர்வு.. போராட்டத்தை அடுத்து மத்திய அரசு உத்தரவு!
டெல்லி: அக்னி பாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படுவதற்கான வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் 2022ம் ஆண்டு நியமனத்திற்கு மட்டுமே இந்த வயது வரம்பு பொருந்தும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. அக்னி பாத் என்ற இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் "அக்னி வீர் " எனப்படும் வீரர்கள் பணிக்கு அமர்த்தப்பட்ட உள்ளனர்.
அக்னி பாத் திட்டம் மூலம் பணிக்கு அமர்த்தப்படும் வீரர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் 4 வருடம் மட்டுமே பணியில் இருப்பார்கள். இவர்களுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும்.

என்ன திட்டம்?
4 வருடங்கள் கழித்து இந்த வீரர்களில் 25 சதவிகிதம் பேர் வரை ராணுவத்தில் நிரந்தரமாக 15 வருட ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள். விருப்பம் இல்லை என்றால் 4 வருடத்திற்கு பின் வெளியேறலாம். விருப்பம் உள்ளவர்கள் நிரந்தரமாக சேர விண்ணப்பிக்கலாம். அதில் தகுதியானவர்கள் மட்டுமே 4 வருடத்திற்கு மேல் நிரந்தரமாக 15 வருடம் பணியாற்ற தேர்வு செய்யப்படுவர்.

எப்படி நியமனம்
இவர்கள் ஆபிசர் அல்லாத ரேங்கில் நிரந்தர பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என்று மத்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. பெண்கள், ஆண்கள் இரு பாலினரும் சேர முடியும். 17.5 - 21 வயது கொண்டவர்களுக்கு மட்டும் அனுமதி. 10 அல்லது 12 வது வரை குறைந்தபட்சம் படித்து இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் சேரும் வீரர்களுக்கு முதல் வருடம் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். வருடம் செல்ல செல்ல சம்பளம் உயர்த்தப்படும். கடைசி வருடம், அதாவது 4வது வருடம் 40 ஆயிரம் ரூபாய் மாதம் சம்பளம் தரப்படும்.

எதிர்ப்பு
இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த திட்டம் காரணமாக ராணுவத்தில் ஒழுங்கு கெட்டுவிடும். அதேபோல் 4 வருடத்திற்கு பின் வெளியே வரும் அக்னி வீரர்கள் வேலை இன்றி கஷ்டப்படுவார்கள். இவர்களை தீவிரவாத இயக்கங்கள் அணுக வாய்ப்பு உள்ளது. பாதுகாப்பு ரீதியாகவும், வேலைவாய்ப்பு ரீதியாகவும் பல சிக்கல்களை இது ஏற்படுத்தும் என்று அக்னி வீர் திட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை வைத்து உள்ளன.

போராட்டம்
அதோடு இந்த திட்டத்திற்கு எதிராக நேற்று இளைஞர்கள் பலரால் நாடு முழுக்க பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. முக்கியமாக வடஇந்தியாவில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. பீகாரில் ரயில் ஒன்றுக்கு போராட்டம் செய்த இளைஞர்கள் தீ வைத்தனர். அங்கு இருந்த இன்டர்சிட்டி ரயில் ஒன்றையும் இளைஞர்கள் சூறையாடினர். அதேபோல் உத்தர பிரதேசத்திலும் ரயில்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது.

மத்திய பிரதேசம்
மத்திய பிரதேசத்திலும் பல்வேறு இடங்களில் ரயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் 40க்கும் மேற்பட்ட ரயில்கள் நேற்று நிறுத்தப்பட்டது. 10 ரயில்கள் வரை சேதம் அடைந்தன. மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பீகார், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் போராட்டம் தீவிரமாக இருந்தது. இந்த திட்டத்திற்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும். 4 வருடங்களுக்கு பிறகு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து இவர்கள் போராட்டம் செய்தனர்.

அக்னி பாத்
இந்த நிலையில் அக்னி பாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படுவதற்கான வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் 2022ம் ஆண்டு நியமனத்திற்கு மட்டுமே இந்த வயது வரம்பு பொருந்தும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வடஇந்தியாவில் தொடர்ந்து வரும் போராட்டங்களுக்கு இடையில் வயது வரம்பு உயர்த்தப்பட்டது. 21 ஆக வயது வரம்பு இருந்த நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் போராட்டம் இன்றும் தொடரும் பட்சத்தில், சட்டத்தில் மேலும் மாற்றங்கள் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications