நாளை தொடங்கும் பட்ஜெட் தொடர்.. இன்று 11 எதிர்க்கட்சி எம்பிக்கள் இடைநீக்கம் ரத்து.. பரபர அறிவிப்பு
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கும் நிலையில், எதிர்க்கட்சி எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்படுவது ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு இறுதியில் நடைபெற்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. முதலில் அடையாளம் தெரியாத சிலர் அவைக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டது பகீர் கிளப்புவதாக இருந்தது.

அதன் பிறகு இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இல்லாத வகையில் அதிகபட்ச எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுவும் அப்போது நாடு முழுக்க பேசுபொருளானது.
வெளியான அறிவிப்பு: இதற்கிடையே ராஜ்யசபா தலைவர் ஜகதீப் தன்கர் 11 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீதான இடைநீக்கத்தை ரத்து செய்துள்ளார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் ஏற்கனவே அனுபவித்த இடைநீக்கம் காலத்தை விதிமீறலுக்கு போதுமான தண்டனையாகக் கருத வேண்டும் என்று உரிமை மீறல் குழு ராஜ்யசபா தலைவருக்குப் பரிந்துரை அளித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் நாளை புதன்கிழமை நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் சிறப்பு உரையில் கலந்து கொள்ள முடியாது என்று குழு குறிப்பிட்டதாகவும் கூறப்படுகிறது.
யார் அந்த எம்பிக்கள்: இந்த 11 எம்பிக்கள் மீது உரிமை மீறல் மற்றும் ராஜ்யசபா அவமதிப்பு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இதனால் காங்கிரஸின் ஜெபி மாதர், எல் ஹனுமந்தையா, நீரஜ் டாங்கி, ராஜ்மணி படேல், குமார் கேட்கர் மற்றும் ஜி.சி.சந்திரசேகர், சிபிஐ கட்சியின் பினோய் விஸ்வம் மற்றும் சந்தோஷ் குமார், திமுகவின் முகமது அப்துல்லா, சிபிஎம் கட்சியின் ஜான் பிரிட்டாஸ், ரஹீம் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தனர்.
குளிர்காலக் கூட்டத் தொடரின் போது சிலர் நாடாளுமன்றத்தின் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் மீறி உள்ளே நுழைந்து ரகளை செய்தனர். அவர்கள் கலர் புகைகளை வரும் குப்பிகளை வீசி பிரச்சினை செய்தனர். இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பினர். அதைத் தொடர்ந்தே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இருந்து மொத்தம் 146 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
பின்னணி என்ன: அவர்களில் 132 எம்பிக்கள் அந்த குளிர்கால கூட்டத்தொடரில் மட்டுமே சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எனவே, குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 29-ம் தேதி முடிந்த நிலையில், அத்துடன் அவர்களின் சஸ்பெண்ட் காலமும் முடிவுக்கு வந்தது. அதேநேரம் மீதமுள்ள 14 எம்.பி.க்கள் லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதில் குழப்பமே நிலவி வந்தது.
இதற்கிடையே ராஜ்யசபாவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 11 எம்.பி.க்கள் கூட்டாக அவை தலைவர் ஜக்தீப் தன்கரை சந்தித்து தங்கள் இடைநீக்கத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சூழலில் தான் அவர்கள் மீதான இடைநீக்கம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
என்ன நடந்தது: இந்த விவகாரத்தில் விவரம் அறிந்த சிலர் கூறுகையில், "விதி 256இன் படி, அவை தலைவரால் உறுப்பினர்களை அதிகபட்சம் அந்த அமர்வு காலம் வரை மட்டுமே சஸ்பெண்ட் செய்ய முடியும். இதையும் அந்த எம்பிக்கள் அவை தலைவரிடம் சுட்டிக் காட்டியுள்ளனர். அதன் பிறகே இந்த இடைநீக்கம் ரத்து அறிவிப்பு வந்துள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications