"அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையால் கட்சிப் பணிகள் தேக்கம்" சுப்ரீம்கோர்டில் எடப்பாடி தரப்பு வாதம்
டெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக தேர்தல் ஆணையம் சார்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் இருவருக்கும் அனுப்பப்பட்ட கடிதம் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தன. இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவது அக்கட்சியினரிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வானகரத்தில் ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயா்நீதிமன்றம் விசாரித்தது.
இந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் ஆகஸ்ட் 17ம் தேதி அளித்த தீா்ப்பில், ஜூலை 11 அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது. அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தாா்.

ஐகோர்ட் தீர்ப்பு
இதனை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கலான மேல்முறையீடு மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வு அளித்த தீா்ப்பில், தனிநீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீா்ப்பை ரத்து செய்ததுடன், ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீா்ப்பளித்தனர்.

ஓபிஎஸ் மேல்முறையீடு
இந்த தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீா்செல்வம், பி.வைரமுத்து தரப்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எடப்பாடி பழனிசாமி, அதிமுக தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் சாய் அமா்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது.

நீதிபதிகள் உத்தரவு
இந்த வழக்கு டிசம்பர் 15ம் தேதியன்று விசாரணைக்கு வந்தபோது, நேரமின்மை காரணமாக, வழக்கை நாளைக்கு ஒத்திவைக்கலாமா என்று நீதிபதிகள் கேட்ட போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பின் தள்ளிவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை ஜனவரி 4ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

விசாரணை தொடக்கம்
அதேபோல் விசாரணைக்குள் எழுத்துப்பூர்வமான அனைத்து வாதங்களையும் தாக்கல் செய்வதை இரு தரப்பும் உறுதி செய்யுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர். இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. கடந்த சில நாட்களாக தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதங்கள் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று வழக்கு விசாரணை அதிமுகவினரிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்சிப் பணிகள் தேக்கம்
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், இடைக்கால உத்தரவுகள் சிலவற்றின் மீது கவனம் செலுத்துவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் எடப்பாடி பழனிசாமி தரப்பில், உச்சநீதிமன்ற வழக்கால் கட்சிப் பணிகள் தேக்கமடைந்துள்ளதாக வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications