ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார விழா.. பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!
டெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஆதரவாளர்களின் செல்வாக்குடன் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி கண்டார். அதிமுக பொதுக் குழுவுக்கு விதிக்கப்பட்ட தடை முதல் அதிமுக அலுவலகத்திற்கு சீலை அகற்றி சாவியை பெற்றுக் கொண்டது வரை அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் கைகள் அதிகமாக ஓங்கியுள்ளது.

மறுபுறம் ஓபிஎஸ் நீதிமன்ற வழக்குகள், தேர்தல் ஆணையம் என்று ரூட்டை மாற்றியுள்ளார். இதுமட்டுமல்லாமல் டெல்லியில் பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரை யார் சந்திப்பார்கள் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே ஒற்றைத் தலைமை விவகாரம் தொடங்கிய நாள் முதலே, அவ்வப்போது ஓபிஎஸ்-ம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் ஓ.பி.ரவீந்திரநாத் பல்வேறு சந்திப்புகளை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியது. அதேபோல் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை மற்றும் குட்கா வழக்கில் விஜயபாஸ்கர் மீது சிபிஐ விசாரணை தீவிரம் காட்டி வருவது இபிஎஸ் தரப்புக்கு பிரச்னையை கொடுத்தது.
இந்த நிலையில் தான் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் கலந்துகொள்வதற்காகவே எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். 5 நாட்கள் டெல்லியில் முகாமிடும் எடப்பாடி பழனிசாமி, புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் பதவியேற்பிலும் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டுள்ளார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் உடன் இருந்துள்ளார். இதனால் விரைவில் பாஜகவின் முக்கியத் தலைவர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசுவார் என்று கூறப்படுகிறது.
அதேபோல் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடியை ஓபிஎஸ் தரப்பில் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியது. இதனால் ஓபிஎஸ்-க்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமி அனைத்து விஷயங்களையும் பேசி முடிவுக்கு கொண்டு வரும் முனைப்புடன் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications