அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பா? நேரடியாக மோடியை சந்தித்த தம்பிதுரை.. காரணம் தெரியுமா?
பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக எம்பி தம்பிதுரை சந்தித்துள்ளார்.
டெல்லி: தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக இடையே சலசலப்பு ஏற்பட்டிருந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக எம்பி தம்பிதுரை சந்தித்துள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் பாஜக வெற்றிபெற்றதற்கு வாழ்த்து கூறுவதற்காக தம்பிதுரை, பிரதமர் மோடியை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மைக் காலமாக தமிழ்நாடு பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர். குறிப்பாக அண்ணாமலையின் தலைமை, அமர் பிரசாத் ரெட்டி, வார் ரூம் உள்ளிட்ட பிரச்சினைகளை அனைவரும் சுட்டிக்காட்டியே வெளியேறுகின்றனர்.
குறிப்பாக பாஜகவின் ஐடி விங் தலைவர் சிடி நிர்மல் குமார், ஐடி விங் செயலாளர் திலிப் கண்ணன் என அடுத்தடுத்து நிர்வாகிகள் வெளியேறினர். தமிழ்நாடு பாஜகவில் தொழில்நுட்ப பிரிவு மிகவும் வலுவாக காணப்பட்ட நிலையில், ஐடி விங் நிர்வாகிகள் மொத்தமாக அதிமுக பக்கம் சாய்ந்தனர்.

அதிமுகவில் இணைந்த பாஜக நிர்வாகிகள்
அவர்களை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக வரவேற்றது பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. அதனைத் தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணியில் இருந்துகொண்டே அதிமுக இதனை செய்திருக்கக் கூடாது என்று அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான அமர் பிரசாந்த் ரெட்டி ட்விட்டரில் பதிவிட்டார்.

சலசலப்பு
அதுமட்டுமல்லாமல் பாஜகவினர் நான்கு பேர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்த, விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அதேபோல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னை ஜெயலலிதாவோடு ஒப்பிட்டு பேசியதால், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கடுமையான பதிலடி கொடுத்தனர்.

அதிமுக - பாஜக கூட்டணி
அதேபோல் அதிமுகவின் ஐடி விங் நிர்வாகிகளும் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுக்க தொடங்கினர். இதனிடையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுக பல ஆயிரம் வாக்குகளை இழந்ததாக செங்கோட்டையன் பேச, அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்று கேள்விகள் எழுந்தன. இருப்பினும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்றே அதிமுக நிர்வாகிகள் கூறி வந்தனர்.

பிரதமரை சந்தித்த தம்பிதுரை
இதனிடையே பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா, அதிமுக தலைவர்களை விமர்சிக்கக் கூடாது என்று பாஜகவினரை கண்டித்திருந்தார். இருப்பினும் பாஜக - அதிமுக இடையே சுமூக உறவு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக எம்பி தம்பிதுரை சந்தித்துள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் பாஜக வெற்றிபெற்றதற்கு வாழ்த்து கூறுவதற்காக சந்திப்பு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேரடியாக பிரதமருடன் சந்திப்பு
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக இடையே சலசலப்பு ஏற்பட்டிருந்த நிலையில், அதிமுகவின் முக்கிய நிர்வாகி நேரடியாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். இதன் மூலம் அதிமுக - பாஜக இடையே எந்த சலசலப்பும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அதேபோல் அதிமுக நிர்வாகிகள் நேரடியாக டெல்லி தலைமையை சந்தித்ததன் மூலம், மாநில பாஜகவினருக்கும் மறைமுக செய்தியை எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருப்பதாக அதிமுகவினர் கருத்து கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications