இந்தியா முழுமைக்கும் தொட்டில் குழந்தைகள் திட்டம்.. நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்த தம்பிதுரை
டெல்லி : முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த தொட்டில் குழந்தை திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டுமென மாநிலங்களவையில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்
தமிழகத்தின் சில பகுதிகளில் கொடும் செயலாக கருதப்பட்ட பெண் சிசுக்கொலையை தடுக்கும் நோக்கில் 1992 ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தொட்டில் குழந்தை திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
சேலம் மாவட்டத்தில் முதல்முறையாக தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் தொட்டில்கள் வைக்கப்பட்டன. இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் தொட்டில் குழந்தை திட்டம் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக தொட்டில் குழந்தை திட்டம்
பெண் குழந்தை பிறந்தால் அவற்றை வளர்க்க முடியாது எனக் கருதுபவர்கள் இந்த தொட்டில்களில் குழந்தைகளை வைத்தால், அவர்களை அரசே பராமரிக்கும் என்ற நோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் மதுரை தேனி திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களிலும் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி சமூக சூழ்நிலை காரணங்களால் பெற்றோர்களால் நிராகரிக்கப்படும் பெண் குழந்தைகளை பாதுகாத்து பராமரிக்கும் வண்ணம் மருத்துவமனைகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் குழந்தைகள் இல்லம் மற்றும் காப்பகங்களில் தொட்டிகள் வைக்கப்பட்டன.

பெண் குழந்தைகள் மீட்பு
2004ஆம் ஆண்டில் மொத்தம் 188 இடங்களில் தொட்டில்கள் வைக்கப்பட்டு திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டது. இதுவரை சுமார் 5 ஆயிரம் குழந்தைகள் இந்த திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டு மறுவாழ்வு பெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 966 ஆண் குழந்தைகள் 4038 பெண் குழந்தைகள் என மொத்தம் 5024 பச்சிளம் குழந்தைகள் மீட்கப்பட்டு முறைப்படி தத்துக் கொடுக்கப்பட்டுள்ளனர்.

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக முட்புதர்களுக்குள்ளும், குப்பைத்தொட்டி, மருத்துவமனை வளாகங்களில் பச்சிளம் குழந்தைகள் செல்லப்படும் நிலை உள்ளது. இதே அவல நிலை இந்தியா முழுவதும் நீடிக்கிறது. மேலும் தமிழகத்தில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 942 பெண் குழந்தைகள் என்ற நிலையே தொடர்வதாகவும் சமூக நலத்துறை அறிக்கைகள் கூறுகின்றன. இந்நிலையில் கிடப்பில் உள்ள இந்த திட்டத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்களும், சமூக நலத்துறை செயற்பாட்டாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

அதிமுக தம்பிதுரை கோரிக்கை
இந்த நிலையில்தான் பெண் குழந்தைகளைப் பாதுகாக்க முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்திய தொட்டில் குழந்தை திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும் எனவும், இதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும் என மாநிலங்களவையில் அதிமுக எம்பி தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் மாநிலங்களவையில் பேசிய தம்பிதுரை, பெண் சிசுக் கொலையை தடுக்கும் உன்னத நோக்கம் மட்டுமல்லாமல் அவர்களுக்கு மறுவாழ்வு அளித்து கல்வி அளிக்கும் இந்த திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

மத்திய அரசு உறுதி
தமிழகத்தில் தொட்டில் குழந்தை திட்டத்தின் மூலம் ஏராளமான பெண் குழந்தைகள் பாதுகாக்கப்பட்டதோடு, அவர்கள் கல்வி கற்க உதவியது எனவும் தம்பிதுரை பேசினார். இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, பெண் குழந்தைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் எனவும் அதிமுக எம்பி தம்பிதுரையின் கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும், திட்டம் சம்பந்தமான விவரங்கள் பகிர்வு தொடர்பாக தமிழக அரசைவிரைவில் அணுகுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications