“கடவுளின் பெயரால் உறுதி!” மாநிலங்களவையில் அதிமுக எம்பிக்கள் பதவியேற்பு!
டெல்லி: மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்பிக்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர். அதிமுக எம்பிக்களாக ம.தனபால், இன்பதுரை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் இருவரும் இன்று கடவுளின் பெயரால் உறுதியேற்று கொள்வதாக கூறி பதவியேற்றுக்கொண்டனர்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்பிக்களாக பணியாற்றிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைந்தது. இதற்காக காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. திமுக தரப்பில் மூன்று இடங்கள் தங்கள் கட்சிக்கும், ஒரு இடம் தங்கள் கூட்டணி கட்சிக்கும் பேசியது போல ஒதுக்கப்பட்டது. அதாவது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு ஒரு எம்பி சீட் ஏற்கெனவே பேசப்பட்டிருந்தது.

இதனையடுத்து அதிமுகவுக்கு இருக்கும் 2 எம்பிக்கள் சீட்டில் ஒன்று கூட்டணியான தேமுதிகவுக்கு ஒதுக்கப்படுமா? என்று கேள்வி எழுந்திருந்தது. ஏனெனில் இது தொடர்பாக ஏற்கெனவே அதிமுக வாக்குறுதியளித்திருந்தது. ஆனால், இந்த முறை இரண்டு சீட்களும் அதிமுகவே முழுமையாக எடுத்துக்கொண்டது. அதன்படி ம.தனபால், இன்பதுரை ஆகியோர் வேட்பாளராக களமிறக்கப்பட்டனர். அவர்கள் போட்டியின்றி ஜூன் 19ஆம் தேதி எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று அவர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
ம.தனபால் மற்றும் இன்பதுரை தேர்வுக்கு பின்னால் சில கணக்குகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. கட்சிக்குள் பொதுமக்களிடையே நன்கு பரிச்சயமான பல தலைவர்கள் இருக்கும்போது, இரண்டு வழக்கறிஞர்களை எம்பிக்களாக்க வேண்டிய அவசியம் என்ன? என்கிற கேள்வி எழுந்திருந்தது.
இதில் இன்பதுரை திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில், அப்பாவுவை 49 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றவர் இவர். மட்டுமல்லாது அதிமுக தொடர்பான பல வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றத்தில் திறமையாக வாதாடியிருக்கிறார். குறிப்பாக 2021 பொதுக்குழு பஞ்சாயத்து, இரட்டை இலை சின்னத்தின் உரிமை கோரல் உள்ளிட்ட வழக்குகளில், அதிமுகவுக்கு சாதகமாக தீர்ப்புகள் வர இவரது பங்களிப்பும் முக்கியமானதாகும்.
அதேபோல ம.தனபால் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தின் அவை தலைவராக இருக்கிறார். எம்எல், பிச்எச்டி படித்திருக்கிறார். சட்ட விஷயங்களில் இவரது ஆலோசனைகள் பல நேரங்களில் கை கொடுத்திருக்கிறது. எதிர்காலத்தில் சட்ட விவரகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய பலம் தேவைப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்குகள் இன்னும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. எனவே கட்சியை முழுமையாக மீட்பதற்கும், அதை தனக்கு கீழே கொண்டு வருவதற்கும் எடப்பாடி போட்ட பிளான்தான் இது என்று சொல்லப்படுகிறது.
அதேபோல தென் மாவட்டங்களில் ஓபிஎஸ் தரப்பினர்தான் அதிமுகவுக்கு பலமாக இருந்தார்கள் என்றும், அவர் பிரிந்திருப்பதால் கட்சியின் செல்வாக்கு குறைந்திருப்பதாக வரும் பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தென் மாவட்ட கட்சி நிர்வாகிகளின் முழு நம்பிக்கையை பெறவும்தான் இன்பதுரையை எடப்பாடி எம்பியாக தேடி பிடித்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications