அமித்ஷா இல்லத்திற்கு போன எடப்பாடி பழனிசாமி! 15 நிமிடங்கள் தனியாக ஆலோசனை! அதிமுக- பாஜக கூட்டணி உறுதி?
டெல்லி: தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், இப்போதே இங்கு அரசியல் காட்சிகள் மாற தொடங்கியுள்ளன. இன்று டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி திடீரென உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசியுள்ளார். சுமார் 2 மணி நேரம் நடந்த சந்திப்பு இப்போது தான் நிறைவடைந்தது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் இப்போது திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், ஸ்டாலின் முதல்வராக இருக்கிறார். தமிழகத்தில் அடுத்தாண்டு தான் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. என்னதான் தேர்தலுக்கு ஓராண்டுக்கு மேல் கால அவகாசம் இருந்தாலும், இப்போதே அரசியல் களம் பரபரப்பாகிவிட்டது.

எடப்பாடி பழனிசாமி- அமித் ஷா சந்திப்பு
தேர்தலை மனதில் வைத்தே ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் கணக்குப் போட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திடீரென டெல்லி சென்றார். அவர் டெல்லியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தைத் திறந்து வைக்கவே டெல்லி சென்றதாகக் கூறப்பட்டது. அதேநேரம் அவர் டெல்லியில் வைத்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது.
இருப்பினும், காலை முதல் இந்தத் தகவலை எடப்பாடி பழனிசாமி தரப்பு மறுத்தே வந்தது. இந்தச் சூழலில் மாலை 7 மணியளவில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். டெல்லியில் அமித் ஷா இல்லத்திற்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி அவரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது எடப்பாடி பழனிசாமி உடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்துள்ளது.
தனியாக ஆலோசனை
முதலில் எடப்பாடி பழனிசாமி உடன் தம்பிதுரை, சி.வி. சண்முகம், எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் அமித் ஷாவை சந்தித்துப் பேசியுள்ளனர். பிறகு மற்ற நிர்வாகிகள் வெளியேறிவிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி மட்டும் அமித் ஷாவுடன் தனியாக ஆலோசனை நடத்தியுள்ளார். இருவரும் சுமார் 15 நிமிடங்கள் வரை தனியாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு சற்று நேரத்திற்கு முன்பு தான் நிறைவடைந்தது
அமித் ஷா ட்வீட்
அடுத்தாண்டு நடைபெறும் தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வைக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கிடையே அமித் ஷாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கூட்டணியை உறுதி செய்யும் விதமாக, ""2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்" என்று பதிவிட்டுள்ளார்
மாறிய டோன்
விரைவில் அதிமுக பாஜக இடையேயான கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இந்த கூட்டணி என்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்று என்று சொல்லிவிட முடியாது. கடந்த காலங்களில் எடப்பாடி பழனிசாமியின் பேட்டிகளில் அவரது டோனை பார்த்தாலே இதை யூகித்து இருக்க முடியும்.
அதாவது சில மாதங்களுக்கு முன்பு வரை, பாஜக உடன் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்றே எடப்பாடி பழனிசாமி கூறி வந்தார். மீண்டும் எந்தக் காலத்திலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்காது என்றெல்லாம் கூறி வந்தார். ஆனால், சமீப காலங்களில் அவரது பேச்சில் மாற்றம் தெரிந்தது. திமுக தான் எதிரி என்றும் அவர்களை ஆட்சியில் இருந்து அகற்றத் தேவையான கூட்டணி அமைப்போம் என்றும் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications