டெல்லியில் காற்று மாசு.. மூச்சுத்திணறல்.. மருத்துவமனைக்கு படையெடுக்கும் மக்கள்.. வாகனகள் நுழைய தடை
டெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் இரண்டாவது நாளாக காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவமனை நோக்கி படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கி ஜனவரி மாதம் வரை வழக்கமாக டெல்லியில் காற்று மாசு அதிகரிக்கும். அதேபோல இந்த முறையும் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது. பொதுவாக காற்றில் மாசு 201-300 வரை இருந்தால் அது மோசமான, சுவாசிக்க ஏற்றதக்கதாக அல்லாத காற்றாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் டெல்லியில் தற்போது 400ஐ தாண்டி காற்று மாசு பதிவாகியுள்ளது. இதனால் மருத்துவமனையை நோக்கி படையெடுப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த காற்று மாசு கடும் மூச்சுத்திணறலை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இன்றும் நாளையும் அரசு மற்றும் தனியார் தொடக்கப்பள்ளிகளுக்கு டெல்லி அரசு 6ம் தேதி வரை விடுமுறை அறிவித்திருக்கிறது. அதேபோல கட்டிடப் பணிகள் மேற்கொள்ளவும், கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மோசமான வானிலை காரணமாக காற்று மாசு இதேபோல இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் டெல்லி மக்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றனர்.
டெல்லியின் லோதி சாலை, ஜஹாங்கிர்புரி, ஆர்கே புரம் மற்றும் ஐஜிஐ ஏர்போர்ட் போன்ற இடங்களில் காற்றின் தரம் மிகவும் மோசனமான அளவில் பதிவாகியுள்ளது. நிலைமையை சமாளிக்க லோதி சாலை பகுதியில் டெல்லி மாநகராட்சி சார்பில் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது. உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில், செக்டார் 62, செக்டார் 1 மற்றும் செக்டார் 116 ஆகிய பகுதிகளிலும் காற்றின் தரம் மோசமான அளவில் பதிவாகியுள்ளது.
மாசு மேலும் அதிகரிக்காமல் இருக்க BS3 மற்றும் BS4 வாகனங்கள் டெல்லிக்குள் இயக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி எனப்படும் கேஸ் மூலமாக இயங்கும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உத்தரப் பிரதேசத்திலிருந்து டெல்லிக்குள் BS3 மற்றும் BS4 வாகனங்கள் வருவதால் காற்று மாசு அதிகரிக்கும் அபாயம் எழுந்திருக்கிறது. உத்தரப் பிரதேச அரசு இதை தடுக்க வேண்டும் என்று டெல்லி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். அதேபோல சாலையில் செல்லும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையை 50% குறைக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
காற்றின் வேகம் குறைவாக இருப்பதாலும், மழை இல்லாததாலும் டெல்லியில் உள்ள காற்று மாசு தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து வருகிறது. டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதால் காற்று மாசு அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications