தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்ற கூட்டம்.. PFI அமைப்புக்கு தடை விதிக்க தீர்மானம்
டெல்லி: மதம் மற்றும் சித்தாந்தத்தின் பெயரால் நல்லிணக்கத்தை சீர்குலைக்கவும், கலவரத்தை ஏற்படுத்தவும் சதி செய்யும் சக்திகளுக்கு எதிராக நாடு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் எச்சரித்துள்ளார்.
டெல்லியில் 'அகில இந்திய சூஃபி சஜ்ஜதனாஷின் கவுன்சில்' ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், மதத் தலைவர்கள் கலந்துகொண்டு அமைதி மற்றும் ஒற்றுமைக்கான தீர்மானத்தை விவாதித்து நிறைவேற்றினர். இந்த நிகழ்ச்சிக்கு அஜித் தோவல் அழைக்கப்பட்டிருந்தார். இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த 'கவுன்சில்' சில தீர்மானங்களை நிறைவேற்றி இருந்தது. அதில், பாபுலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) போன்ற அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்பதையும் ஒரு தீர்மானமாக நிறைவேற்றியிருந்தது. இதனையடுத்துதான் அஜித் தோவல் சிறப்புரையாற்றினார்.
தோவல் தனது சிறப்புரையில் பேசியதாவது, "சில குழுக்கள் (elements) நாட்டின் முன்னேற்றத்தைக் கெடுக்கும் சூழலை உருவாக்க முயற்சிக்கின்றன. இவை, மதம் மற்றும் சித்தாந்தத்தின் பெயரால் மோதலையும் பிளவையும் உருவாக்குகின்றன. மட்டுமல்லாது இதன் செயல்பாடுகள் முழு நாட்டையும் பாதிக்கிறது. நாட்டிற்கு அப்பாலும் இதன் செயல்பாடுகள் பரவுகிறது" என்று குறிப்பிட்டார்.
நுபுர் சர்மாவின் சர்ச்சை பேச்சு வெடித்து ஏறத்தாழ 2 மாதங்களுக்கு பின்னர் தோவல் இவ்வாறு கூறியுள்ளார். இந்த சர்ச்சை சம்பவத்தின்போதே இதுபோன்ற கருத்துக்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறியிருந்தார். முன்னதாக நுபுர் சர்மாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜஸ்தான் மாநிலத்தில் 2 இஸ்லாமியர்கள் ஒரு தையல்காரரின் தலையை வெட்டி அவரை படுகொலை செய்து அதனை நேரலையும் செய்தனர்.
அந்த சர்ச்சை தற்போது ஓரளவு ஓய்ந்த இந்த சமயத்தில் தற்போது அஜித் தோவல் தேச விரோத சக்திகள் குறித்து மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார். இவர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட கவுன்சில் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், "வேற்றுமையில் ஒற்றுமைக்கு பிரகாசமாக விளங்கும் நமது இந்தியாவின் பிம்பத்தை சிதைக்க முயற்சிக்கும் சில சமூகவிரோதிகள் மற்றும் குழுக்களால் இந்தியா தற்போது கடினமான காலங்களை எதிர்கொண்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல இந்த கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானத்தில், "தேச விரோத செயல்களில் ஈடுபடும், மற்றும் நாட்டை பிளவுபடுத்தும் செயல்திட்டத்தை பின்பற்றி, நமது குடிமக்களிடையே முரண்பாடுகளை உருவாக்கும் PFI (பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா) போன்ற அமைப்புகள் தடை செய்யப்பட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்த கவுன்சில் நிறைவேற்றிய 8 தீர்மானங்களில் இதுவும் ஒன்றாகும்.
மேலும், "எந்தவொரு நபரும் அல்லது அமைப்பும் எந்த வகையிலும் சமூகங்களிடையே வெறுப்புணர்வை பரப்பியதற்கான ஆதாரங்களுடன் அடையாளம் காணப்பட்டால் அந்த அமைப்பு/நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம்" எனவும் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications