"என்னோட பேக்கில் வெடிகுண்டு இருக்கு!" நடுவானில் சொல்லிவிட்டு கூலாக உட்கார்ந்த பயணி! அலறிய ஆகாசா
டெல்லி: நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது திடீரென பயணி ஒருவர் தனது பேக்கில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இந்தியாவில் விமான பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதிகரிக்கும் நடுத்தர வர்க்கத்தினர். குறையும் விமான டிக்கெட்கள் ஆகியவையே இதற்கு முக்கிய காரணமாகும். இதனால் கொரோனா ஆண்டுகளைத் தவிர மற்ற ஆண்டுகளில் விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

நமது நாட்டை பொறுத்தவரை இண்டிகோ தான் டாப் இடத்தில் இருக்கிறது. டாடாவின் ஏர் இந்தியா இண்டிகோவுக்கு போட்டி தர ரெடியாகும் நிலையில், ஆகாசா ஏர் என்ற நிறுவனமும் கடும் போட்டி தருகிறது.
ஆகாசா ஏர்: இதற்கிடையே டெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஆகாசா ஏர் விமானத்தில் பயணி ஒருவர் திடீரென தனது பேக்கில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து 185 பயணிகள் இருந்த அந்த ஆகாசா விமானம் உடனடியாக மும்பை விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து டெல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆகாசா விமானத்தில் தான் இந்தச் சம்பவம் அரங்கேறி உள்ளது.
விமானம் தரையிறங்கிய நிலையில், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் அவரது பையைச் சோதனை செய்துள்ளனர். இருப்பினும், அதில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை. இருப்பினும், பாதுகாப்பு கருதி விமானம் முழுமையாகச் சோதனை செய்யப்பட்டது. அங்கும் வெடிகுண்டுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதையடுத்து அந்த குறிப்பிட்ட பயணியை போலீசார் கைது செய்தனர்.
பரபர சம்பவம்: இது குறித்து ஆகாசா ஏர் தரப்பில் இருந்தும் விளக்கம் தரப்பட்டுள்ளது.. அதில், "நள்ளிரவு 12.07 மணிக்கு புனேயிலிருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த ஆகாசா ஏர் விமானம் QP 1148 விமானத்தில் 185 பயணிகள் மற்றும் 6 விமான குழுவினர் இருந்தனர். இருப்பினும், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பாதுகாப்பு எச்சரிக்கை வந்தது. இதையடுத்து நெறிமுறைகளின்படி விமானம் மும்பைக்கு திருப்பி விடப்பட்டது. எமர்ஜென்சி காலத்தில் செய்ய வேண்டிய அனைத்து நடைமுறைகளையும் விமானி செய்தார்.
இதையடுத்து விமானம் நள்ளிரவு 12.42 மணிக்கு மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. இருப்பினும், பாதுகாப்பு எச்சரிக்கை போலி என்று பின்னர் தெரிய வந்தது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
போலீசார் விளக்கம்: அதேபோல இது குறித்து போலீசார் கூறுகையில், "விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளின் உடைமைகள் முழுமையாகச் சோதனை செய்யப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்களும் ஆய்வு செய்தனர். இருப்பினும், சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் எதுவும் அங்கே கண்டறியப்படவில்லை" என்றார்.
வெடிகுண்டு பயத்தைக் கிளப்பிய அந்த பயணியின் உறவினரும் அதே விமானத்தில் பயணித்துள்ளார். அவர் நெஞ்சுவலிக்கு மருந்து சாப்பிட்டதாகவும், இதனால் ஏதேதோ உளறிக் கொண்டிருப்பதாகவும் அந்த உறவினர் போலீசாரிடம் கூறினார். போலீசார் விசாரணையில் விமானத்தில் வெடிகுண்டு இல்லை என்பது உறுதியான நிலையில், மும்பை விமான நிலையத்தில் இருந்து காலை 6 மணியளவில் விமானம் டெல்லிக்குப் புறப்பட்டது. இது குறித்து மும்பை போலீசார் விசாரணையைத் தீவிரமாக நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications