"புத்தாண்டை கொண்டாடுவது பாவம்.. முஸ்லீம்கள் யாரும் கொண்டாடக்கூடாது.." ஜமாத் தேசியத் தலைவர் உத்தரவு
டெல்லி: உலகமே புத்தாண்டைக் கொண்டாடத் தயாராகி வரும் நிலையில், முஸ்லீம்கள் புத்தாண்டைக் கொண்டாடக்கூடாது என்று கூறியுள்ள அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தேசியத் தலைவர் மௌலானா முப்தி ஷஹாபுதீன் ரஸ்வி பரேல்வி, முஸ்லீம்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களைக் கண்டிப்பாகத் தவிர்க்குமாறு ஃபத்வாவை வெளியிட்டுள்ளார். அதேநேரம் சூஃபி அறக்கட்டளையின் தேசியத் தலைவரான காஷிஷ் வார்சி இதை விமர்சித்து இருக்கிறார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இன்னும் சில நாட்களில் புத்தாண்டு பிறக்கவுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இப்போது உலகமே கோலாகலமாக ரெடியாகி வருகிறது. பல இடங்களில் இதற்கான சிறப்பு பார்ட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

புத்தாண்டு கொண்டாட்டங்கள்:
இதற்கிடையே புத்தாண்டு கொண்டாட்டங்களைக் கண்டிப்பாகத் தவிர்க்குமாறு அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தேசியத் தலைவர் மௌலானா முப்தி ஷஹாபுதீன் ரஸ்வி பரேல்வி வலியுறுத்தியுள்ளார். இதற்காக அவர் கடுமையான ஃபத்வாவையும் அவர் வெளியிட்டுள்ளார். இதுபோன்ற புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்பது இஸ்லாத்திற்கு எதிரானவை என்று கூறியுள்ள ரஸ்வி, புத்தாண்டு வாழ்த்துகளைச் சொல்வது, புத்தாண்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது, புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்பது ஆகியவை இஸ்லாமியச் சட்டத்திற்கு எதிரானது என்று சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபத்வா அறிவிப்பில், "இது முஸ்லிம்கள் பெருமைப்பட அல்லது கொண்டாடுவதற்கான நாள் இல்லை.. புத்தாண்டு கொண்டாட்டங்கள், கிறிஸ்தவ மரபுகளில் வேரூன்றியவை. அப்போது நடனம், பாடல் எனக் கேளிக்கைகள் இருக்கும். அவை அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி இஸ்லாமிய மதத்தில் தடை செய்யப்பட்டுள்ளன. அவை ஷரியாவுக்கு எதிரானது என்பதால், முஸ்லிம்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.
களங்கப்படுத்துகிறது:
இத்தகைய கொண்டாட்டங்கள் இஸ்லாமிய விழுமியங்களைக் களங்கப்படுத்துகிறது. இந்த பாவச் செயல்களில் இருந்து முஸ்லீம் இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும். முஸ்லிம்கள் புத்தாண்டு விருந்துகளில் கலந்து கொள்வது இஸ்லாமிய போதனைகளுக்கு முரணானது. ஷரியா சட்டத்தின் கீழ் இதுபோல செய்வோர் குற்றவாளிகளாகக் கருதப்படுவார்கள்.
புத்தாண்டைக் கொண்டாடுவது பெருமைக்குரிய விஷயமல்ல.. புத்தாண்டைக் கொண்டாடக்கூடாது என்று ஃபத்வாவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் புத்தாண்டு என்பது கிறிஸ்தவ புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது, அதாவது ஆங்கில ஆண்டு... இஸ்லாமியர்கள் மற்ற மத நடைமுறைகளையும் கொண்டாடுவது கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
புத்தாண்டைக் கொண்டாட வேண்டாம்:
எனவே, முஸ்லிம்கள் புத்தாண்டைக் கொண்டாட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்... முஸ்லிம்கள் புத்தாண்டைக் கொண்டாடுவதைத் தவிர்க்க வேண்டும்" என்று அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தேசியத் தலைவர் மௌலானா முப்தி ஷஹாபுதீன் ரஸ்வி பரேல்வி கூறினார்.
கடும் எதிர்ப்பு:
அதேநேரம் சூஃபி அறக்கட்டளையின் தேசியத் தலைவரான காஷிஷ் வார்சி, ரஸ்வியின் ஃபத்வாவை வெளிப்படையாக விமர்சித்தார். இது முஸ்லிம்கள் மீது தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிக்கும் ஃபத்வா என்று விமர்சித்துள்ள அவர், சமூகத்தில் உள்ள உண்மையான பிரச்சினைகள் கவனிக்கப்படாமல் விட்டுவிட்டு தேவையில்லாத விஷயங்களுக்கு இதுபோல கட்டுப்பாடுகளை விதிப்பதை ஏற்க முடியாது எனச் சாடினார்..
இது தொடர்பாக காஷிஷ் வார்சி மேலும் கூறுகையில், "புத்தாண்டு கொண்டாட்டங்கள் மக்களை ஒன்றிணைத்து, மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமையைப் பரப்புகின்றன.. இஸ்லாமிய காலண்டர் மொகரம் மாதத்தில் தொடங்குகிறது என்பது உண்மைதான்.. ஆனால், புத்தாண்டு கொண்டாட்டங்களை ஹராம் என்று முத்திரை குத்துவது தேவையற்றதாகவே தெரிகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications