பாஜகவை எதிர்க்க அனைவரும் ஓரணியில் திரளனும்.. சோனியா காந்தியை சந்தித்த பின் லாலு பிரசாத் கருத்து
டெல்லி: ‛‛இந்தியாவில் இந்தியாவில் பாஜகவை எதிர்ப்பது என்பது காங்கிரஸ் இன்றி சாத்தியமில்லை. இதற்கு காங்கிரஸ் கூட்டணி அவசியம். இந்தியாவில் பாஜகவை எதிர்த்து போராடுவதில் காங்கிரஸ் கட்சி தான் முன்னணியில் உள்ளது. பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே பக்கம் நின்று உறுதியான செயல்திட்டத்துடன் செயல்பட வேண்டும்'' என சோனியா காந்தியை சந்தித்த பிறகு ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறினார்.
இந்தியாவில் 2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் தயாராகி வருகின்றன.
இந்நிலையில் பீகாரில் பாஜகவை கழற்றிவிட்டு லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சியுடன் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் நிதிஷ் குமார் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வரானார்.
புரட்டாசி மாசம்.. அமாவாசை.. ஞாயிற்றுக்கிழமை சாம்பார் சாப்டுற அந்த வேதனை இருக்கே சார் வேதனை!

சோனியாவுடன் சந்திப்பு
இந்நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவிக்கு நிதிஷ் குமார் போட்டியிட உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதனை அவர் மறுத்துள்ளார். இருப்பினும் பாஜகவுக்கு எதிராக வலுவான அணி அமைக்க அவர் முடிவு செய்துள்ளார். இதுஒருபுறம் இருக்க பீகாரில் கூட்டணி ஆட்சி அமைந்த நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை நிதிஷ் குமார் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் டெல்லியில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு என்பது சுமார் ஒரு மணிநேரம் வரை நடந்தது.

எதிர்க்கட்சிகளை இணைக்க விவாதம்
இந்த சந்திப்பின்போது 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக செயல்படுவது தொடர்பான வியூகம் பற்றி விவாதித்ததாக சொல்லப்படுகிறது. இதுதவிர 2024ம் ஆண்டில் பாஜகவுக்கான எதிரான கொள்கையில் உள்ள கட்சிகளை ஓரணியில் திரட்டுவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து மூன்று பேரும் கருத்து பரிமாற்றம் செய்துள்ளனர். இந்த சந்திப்புக்கு பிறகு சோனியா காந்தியின் வீட்டில் இருந்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் வெளியே வந்தனர். இருவரும் கைகள் கோர்த்து தலைக்கு மேலே உயர்த்தி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.

லாலு பிரசாத் பேட்டி
அதன்பிறகு ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 2024 நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜகவின் ஆட்சியை அகற்றி நாட்டை காப்பாற்ற வேண்டும் என சோனியா காந்தியிடம் கூறினோம். பீகாரில் பாஜகவை அகற்றியது போல் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என சோனியாவிடம் தெரிவித்தோம். காங்கிரஸ் கட்சியில் புதிய தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மீண்டும் ஒருமுறை சந்திப்போம்.

அனைவரும் ஒன்றாக இணைய...
இந்தியாவில் பாஜகவை எதிர்ப்பது என்பது காங்கிரஸ் இன்றி சாத்தியமில்லை. இதற்கு காங்கிரஸ் கூட்டணி அவசியம். இந்தியாவில் பாஜகவை எதிர்த்து போராடுவதில் காங்கிரஸ் கட்சி தான் முன்னணியில் உள்ளது. பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே பக்கம் நின்று உறுதியான செயல்திட்டத்துடன் செயல்படுவது பற்றி காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் முடிந்த பிறகு விவாதிக்கப்படும்'' என்றார்.