அமித் ஷா உடன் அமரீந்தர் சிங் பேசியது என்ன? ட்விஸ்ட் தரப்போகிறதா பாஜக.. எகிறும் எதிர்பார்ப்பு
டெல்லி : டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் சந்தித்தது ஏன் என்பது குறித்து அவரது ஊடக ஆலோசகர் விளக்கம் அளித்துள்ளார். அமரீந்த சிங் அமித்ஷாவை சந்தித்து விவசாயிகள் பிரச்சனையை பற்றி பேசி உள்ளார் என்று கூறப்படுகிறது. எனவே விரைவில் புதிய அறிவிப்பு வரப்போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வருமான கேப்டன் அமரீந்தர் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகப்போவதாக ஊடகங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
ஏனெனில் சித்துவின் சித்து விளையாட்டுகளால் முதல்வர் பதவியை இழந்த அமரீந்தர் சிங் தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ளார். நேற்றே அமிஷ்தாவை சந்திக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இன்று அது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று மாலை சந்திப்பு
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அமரீந்தர் சிங் இன்று மாலை சந்தித்தார். இதன் மூலம் அவர் பாஜகவில் இணைய உள்ளது உறுதி என்று ஊடகங்களில் செய்திகள் பரவிவருகிறது. இதையடுத்து கேப்டன் அமரீந்தர் சிங்கின் ஊடக ஆலோசகர் விளக்கம் அளித்துள்ளார். அவர் இதுபற்றி கூறும் போது, வேளாண் சட்டங்களுக்கு எதிரான நீண்டகாலமாக நடந்து வரும் விவசாயிகளின் போராட்டம் பற்றி அமித் ஷா- அமரீந்தர் சிங் சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.

விளக்கம்
மேலும் வேளாண் சட்டங்களை ரத்து செய்வதன் மூலம் நெருக்கடியை தீர்க்கவும் , குறைந்தபடச ஆதார விலைக்கு ( எம்எஸ்பிக்கு) உத்தரவாதம் அளிக்கவும், பயிர் பல்வகைப்படுத்தலில் பஞ்சாப்பை ஆதரிக்கவும் அமித்ஷாவை அமரீந்தர் சிங் வலியுறுத்தினார் என கேப்டன் அமரீந்தர் சிங்கின் ஊடக ஆலோசகர் தெரிவித்தார்.

அரசியல் விமர்சகர்
ஆனால் இந்த கருத்தை சமாளிப்பு கருத்தாகவே பார்க்கும் அரசியல் விமர்ச்சகர்கள் விரைவில் அமரீந்தர் சிங் பாஜகவில் சேர அதிக வாய்ப்பு உள்ளதாகவே கூறுகிறார்கள். ஏனெனில் தற்போதைய சூழலில் பஞ்சாபில் மீண்டும் அமரீந்தர் சிங் காங்கிரஸ் சார்பில் முதல்வராக்கப்பட வாய்ப்பு இல்லை. தனக்கு பாஜக முதல்வர் வாய்ப்பு அளித்தால் அமரீந்தர் சிங் காங்கிரஸில் இருந்து விலக தயங்க மாட்டார் என்றே அரசியல் விமர்சர்கள் கூறுகிறார்கள்.

பஞ்சாப் அரசியல்
ஏனெனில் சித்துவின் பேச்சை கேட்டு தன்னை முதல்வர் பதவியில் இருந்து விலக வைத்ததால் காங்கிரஸ் மேலிடம் மீது அமரீந்தர் சிங் கடும் அதிருப்தியில் உ.ள்ளதாகவும் சொல்லப்படுகிறது. எனினும் தற்போதைய நிலையில் அமரீந்தர் சிங் எடுக்கப்போகும் முடிவு குறித்து பஞ்சாப் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

நல்ல செய்தி
அடுத்த ஆண்டு நடைபெற் உள்ள பஞ்சாப் சட்டசபை தேர்தலில் விவசாயிகள் பிரச்சனையே பெரிதாக பேசப்படும் என்பதால் அதை எப்படி சரி செய்வது பாஜக தீவிரமாக உள்ளது. இந்த சூழலில் அமரீந்த சிங் அமித் ஷாவை சந்தித்து விவசாயிகள் பிரச்சனையை பற்றி பேசி உள்ளார். எனவே இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் விரைவில் விவசாயிகளுக்கு நல்ல செய்தி வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications