நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த பிடிஆர்! வார்த்தை போருக்கு மத்தியில் ஆலோசனை.. பின்னணி காரணம்
டெல்லி: இலவச திட்டங்கள் தொடர்பாக மத்திய மற்றும் தமிழக அரசு இடையே வார்த்தை போர் நீடித்த நிலையில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் டெல்லியில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மத்திய அரசு-தமிழக அரசு இடையே தொடர்ந்து வார்த்தை போர் நீடித்து வருகிறது. மத்திய அரசு ஹிந்தி மொழியை திணிப்பதாகவும், அத்தியாவசிய பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பதாகவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியதாகவும் தொடர்ந்து திமுக கட்சியை சேர்ந்த தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதற்கு மத்திய அரசும் பதிலடி கொடுத்து வருகிறது. சமீபத்தில் கூட நாடாளுமன்றத்தில் பெட்ரோல், டீசல் விலையேற்றம் தொடர்பாக விவாதம் நடந்தது. இதில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பகீரங்கமாக குற்றம்சாட்டினார்.

பிடிஆர் விமர்சனம்
இந்த பிரச்சனை முடிந்த நிலையில் தான் இலவச திட்டங்கள் தொடர்பான விவாதம் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் வார்த்தை போரில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சர்களையும், பிரதமர் மோடியையும் தமிழக அமைச்சர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். இதில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் ஒருவர். பல்வேறு விவாதங்களில் பங்கேற்ற அவர் இலவச திட்டங்களுக்கு எதிரான மத்திய அரசின் நிலைப்பாட்டை கடுமையாக சாடினார்.

நிர்மலா சீதாராமன்-பிடிஆர் சந்திப்பு
இந்நிலையில் தான் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். டெல்லியில் நார்த் ப்ளாக்கில் உள்ள நிதியமைச்சகம் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின்போது இருவரும் பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதித்தனர். மதுரையில் நடைபெறுவதாக அறிவித்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், நிலுவை தொகை, ஜிஎஸ்டி வரிவிதிப்பு, சென்னை 2ம் கட்ட மெட்ரோ பணிக்கான கடன் பெறும் நடைமுறை, மாநிலங்களுக்கான ஒரு லட்சம் கோடி கடன் இல்லா மத்திய அரசின் நிதி தொடர்பாக பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

விரிவான ஆலோசனை
இந்த மாத இறுதியில் மதுரையில் நடைபெற உள்ள GST கவுன்சில் குழு கூட்டத்தின் தேதி, முன்னேற்பாடு நடவடிக்கைகள், உள்ளிட்டவை தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. ஏனென்றால் இந்த சந்திப்பு என்பது மதுரையில் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சிலின் 48 வது கூட்டத்தை அடிப்படையாக கொண்டது தான் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் முதல் கூட்டம்
அதாவது கடந்த ஜூன் மாத இறுதியில் சண்டிகரில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது கூட்டம் 2 நாட்கள் நடந்தது. இந்த கூட்டத்தின் முடிவில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கோரிக்கையை ஏற்று ஜிஎஸ்டி கவுன்சிலின் 48வது கூட்டம் மதுரையில் நடைபெறும் என நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த கூட்டம் ஆகஸ்ட்டில் நடக்கும் எனும் நிலையில் தள்ளி்ப்போனது. இருப்பினும் இந்த கூட்டம் இந்த மாதத்தில் நடக்கலாம் என கூறப்படும் நிலையில் தான் இந்த சந்திப்பு நடந்தது. தமிழகத்தில் முதல் முறையாக நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications